மணிலா: இவ்வாரத்தில் தென் சீனக் கடலில் பிலிப்பீன்ஸ், சீனா ஆகிய இரு நாடுகளின் ராணுவக் கப்பல்களுக்கு இடையே மோதல் சம்பவம் நடந்துள்ளது. அவ்விரு நாடுகளும் சொந்தம் கொண்டாடும் சர்ச்சைக்குரிய பாறைகள் நிறைந்தத் தீவில் அப்பிரச்சினை ஏற்பட்டது.
அதன் விளைவாக, சீனா கடல் எல்லையை மீறிவிட்டது என்று பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை (நவம்.2) அன்று குற்றம்சாட்டியது. தென்சீனக் கடலில் “ஸ்காபோரொ ஷோல்” என்று அழைக்கப்படும் இடத்தில் சட்டவிரோதமாக பிலிப்பீன்ஸ் நாட்டு ராணுவக் கப்பல் நுழைந்துவிட்டது என்று சீனா கூறுகிறது. அக்கூற்றுக்கு எவ்வித சட்டபூர்வ அடிப்படையும் இல்லை என்றும் அது மேலும் பதற்றத்தை கூட்டுகிறது எனவும் பிலிப்பீன்ஸ் வெளியுறவுத்துறை (டிஎஃப்ஏ) தெரிவித்துள்ளது. சீனாதான் பிலிப்பீன்ஸ் நாட்டின் எல்லையை மீறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்றும் வெளியுறவுத் துறை கூறியது.
இரு நாடுகளும் பாறைகள் சூழ்ந்த அத்தீவுக்கு சொந்தம் கொண்டாடினாலும் அதன் இறையாண்மை இன்றளவும் உறுதிசெய்யப்படவில்லை. அத்தீவின் கட்டுப்பாட்டை பிலிப்பீன்ஸிடம் இருந்து 2012ல் சீனா பறித்துக்கொண்டது. அன்றுமுதல் சீனா அங்கு ஆதிக்கம் செலுத்திவருகிறது.
“பஜோ டி மசின்லொக்” என்று பிலிப்பீன்ஸ் அத்தீவை அழைக்கிறது. மேலும் தென்சீனக் கடலின் அவ்வட்டாரத்தை தனது இறையாண்மைக்கும் அதிகார வரம்புக்கும் உட்பட்ட பிரத்யேகமான பொருளாதார மண்டலமாக பிலிப்பீன்ஸ் வெளியுறவுத் துறை அறிவித்தது. சீனக் கப்பல்களை “பஜோ டி மசின்லொக்” பகுதியைவிட்டு வெளியேறிவிடும்படி தொடர்ந்து பிலிப்பீன்ஸ் வலியுறுத்திவருகிறது.
பிலிப்பீன்ஸ் நாட்டிலிருந்து 200 கி.மீ. தூரக் கடல் பகுதியில் அந்தப் பாறைத் தீவு அமைந்துள்ளது. அதன் தொடர்பாக அனைத்துலக தீர்ப்பாயத்திடம் மணிலா ஒரு கோரிக்கையை வைத்தது. தீர்ப்பாயத்தின் நடுவர் மன்றம் 2016ல் தென்சீனக் கடலில் 90 விழுக்காடு உரிமை கொண்டாடும் சீனாவின் கோரிக்கைக்கு அனைத்துலக சட்டப்படி எவ்வித அடிப்படையும் இல்லை என்று தீர்ப்பளித்தது. தீர்ப்பை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை.