தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் வடகிழக்கு பருவமழை வாரயிறுதியில் தொடங்கும்

2 mins read
3fd178c0-b8a2-4e7a-b235-aa881b498ab1
வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், உயிரிழப்பு, சொத்துக்களில் பேரழிவைக் குறைக்கவும் அதிகாரிகளின் அறிவுரைகளைக் கேட்டு நடக்குமாறு மலேசியத் துணைப் பிரதமர் அகமட் ஸாகிட் பொதுமக்களை திங்கட்கிழமை கேட்டுக்கொண்டார். - படம்: பெர்னாமா

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் வரும் சனிக்கிழமை தொடங்கி 2024 மார்ச் வரை வடகிழக்குப் பருவமழையுடன் பெரிய அளவிலான பல புயல்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

பருவமழையின் ஆரம்ப கட்டங்களில், பெரும்பாலும் கிளந்தான், தெரெங்கானு, பகாங், ஜோகூர், மேற்கு சரவாக் ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் புயல்கள் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

“பருவமழை வலுவான தாக்கத்தை ஏற்படுத்தினால், குறைந்த அழுத்த வானிலையுடன், நாட்டின் பிற மாநிலங்களில் தொடர்ச்சியான மழை பெய்யும்” என்று வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மழையால் தாழ்வான பகுதிகள், அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளுக்கு திடீர் வெள்ளம் வரக்கூடும் என்று கூறியுள்ளது.

வெப்பமான, வறண்ட வானிலை 2024 மார்ச்சில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது வெப்ப அலைகளை கொண்டு வரும் சாத்தியம் உள்ளது. இந்த வானிலை 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படும்.

பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு வானிலை மையம் மக்களைக் கேட்டுக்கொள்கிறது. விவரங்களுக்கு www.met.gov.my இணையப் பக்கத்தைக் காணுமாறு அது கூறியுள்ளது.

சிலாங்கூரில் இன்னும் பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது.
சிலாங்கூரில் இன்னும் பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. - படம்: பெர்னாமா

திங்கட்கிழமை இரவு வரையில் சிலாங்கூர்,பேராக்கில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 1,003 பேர் பத்து தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கி வருகின்றனர்,

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, சிலாங்கூரில் 177 குடும்பங்களைச் சேர்ந்த 697 பேர் நிவாரண மையங்களில் தங்கியிருப்பதாக சிலாங்கூர் சமூக நலத்துறையின் வெள்ள பேரிடர் செயலியில் வெளியிடப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராவில் நான்கு நிவாரண மையங்களில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 299 பேரும் பகாங்கில் திறக்கப்பட்டுள்ள ஒரு நிவாரண மையத்தில் நால்வரும் தங்கியிருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்