காஸா: ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போருக்குப் பிறகு காஸாவை ஆக்கிரமிக்கவோ ஆட்சி செய்யவோ இஸ்ரேலுக்கு எண்ணமில்லை என்று அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியுள்ளார்.
ஆனால், போராளிகளிடம் இருந்து மிரட்டல்கள் உருவெடுப்பதைத் தடுக்க, காஸாவுக்குள் நுழைய தேவைப்பட்டால் ‘நம்பகமான படைபலம்’ பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
காஸாவில் குடிமை அரசாங்கம் ஆட்சி அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட திரு நெட்டன்யாகு, ஆனால், அக்டோபர் 7ஆம் தேதி நடந்த ஹமாஸ் தாக்குதலைப் போல ஒரு தாக்குதல் மீண்டும் நடக்காமல் இருப்பதை இஸ்ரேல் உறுதிசெய்யும் என்று வியாழக்கிழமையன்று அவர் கூறினார்.
இதற்கிடையே, இஸ்ரேலியப் படைகள் காஸாவில் இருக்கும் சில மருத்துவமனைகள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியதாக அல் ஜஸீரா தொலைக்காட்சியிடம் காஸா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அல் கித்ரா கூறினார்.
காஸா சிட்டியின் ஆகப் பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபா மருத்துவமனையின் ஒரு பகுதியை இஸ்ரேல் தாக்கியதில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக டாக்டர் கித்ரா தெரிவித்தார். ஆனால், அதுகுறித்து மேல்விவரங்களை அவர் வழங்கவில்லை.
அல் ஷிஃபா மருத்துவமனைக்குள் ஹமாசிடம் தளபத்திய நிலையங்களும் சுரங்கப் பாதைகளும் இருப்பதாக இஸ்ரேல் கூறியது. ஆனால், அதை ஏற்க ஹமாஸ் மறுத்துவிட்டது.
தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாகத் தகவல்
வட காஸாவின் சில பகுதிகளில் தினமும் நான்கு மணிநேரத்துக்குப் போரை நிறுத்திக்கொள்ள இஸ்ரேல் ஒப்புக்கொண்டது என்று வெள்ளை மாளிகை வியாழக்கிழமையன்று தெரிவித்தது.
எனினும், போர் நிறுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் மாண்டுவிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
போரை தினமும் சிறிது நேரம் நிறுத்துவதன் மூலம் மனிதாபிமான உதவிக்கான இரண்டு பாதைகளின்வழியாக பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேற வாய்ப்பு கிடைக்கும் என்று வெள்ளை மாளிகையின் தேசியப் பாதுகாப்பு மன்றப் பேச்சாளர் ஜான் கர்பி கூறினார். பிணை பிடித்து வைக்கப்பட்டவர்களை விடுவிக்கவும் தற்காலிகப் போர் நிறுத்தம் உபயோகப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், போரை சிறிது நேரத்துக்கு நிறுத்துவதற்கான திட்டம் இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தம் இருந்தால் அது வெவ்வேறு பகுதிகளில் இடம்பெறும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறினார்.
போர் நிறுத்தம் இருந்ததா என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, திரு நெட்டன்யாகு, “இல்லை. ஹமாஸ் எனும் எதிரி, பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடர்கிறது. எனினும், குறிப்பிட்ட சில இடங்களில் சில மணிநேரத்துக்குப் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வகைசெய்வது எங்கள் எண்ணம். அதை நாம் செய்துகொண்டிருக்கிறோம்,” என்று ஃபாக்ஸ் செய்தி ஒளிவழியில் அவர் பேசினார்.
ஆனால், வியாழக்கிழமையன்று இரவு வேளை நெருங்கும்போது வட காஸாவில் சண்டை நிறுத்தப்பட்டதாகத் தகவல் ஏதும் இல்லை.
இதுகுறித்து இஸ்ரேல் வெளிப்படையாக அதிகாரபூர்வமாகத் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே இருந்த ஏற்பாடுகளின் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைப் பற்றிதான் இஸ்ரேல் பொதுவாகப் பேசி வந்துள்ளது.
கடந்த சில நாள்களாக இஸ்ரேல், காஸா நகரை முழுமையாக முற்றுகையிட்டது. நகரின் தெற்குப் பகுதியில் உருவாக்கப்பட்ட முக்கியப் பாதையின்வழி தினமும் மூன்று, நான்கு மணிநேரத்துக்குப் பொதுமக்கள் வெளியேற இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.
காஸாவிலிருந்து தப்பியோடும் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போதைக்குத் தற்காலிகப் போர் நிறுத்தம் இருக்காது என்று இஸ்ரேலின் தற்காப்பு அமைச்சர் யொவாவ் கலான்ட் செய்தியாளர்களிடம் கூறினார்.
தகவல் குறிப்பிடப்படாத பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் அரசியல் ஆலோசகர் டாஹர் அல்-நோனோ தெரிவித்தார். இஸ்ரேலுடன் இதுவரை எந்த ஒப்பந்தமும் இடம்பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

