காஸா / வாஷிங்டன்: மருத்துவமனைகளின் மீதும் அருகிலும் இஸ்ரேல் 3 தாக்குதல்களை நடத்தியதாக காஸா அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேல் நடத்தும் போரில் காயம் அடைந்து அகதிகளாகியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் மருத்துவத் தேவைகளை தீர்க்கமுடியாமல் தள்ளாடும் காஸாவிற்கு இது மேலும் அழுத்தத்தைத் தந்துள்ளது.
அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் காஸா சுகாதார அமைச்சின் பேச்சாளர் டாக்டர் அஷ்ரவ் அல் கிட்ரா இதனை தெரிவித்தார். அந்த மருத்துவமனைகளில் அல் ஷிஃபா மருத்துவமனையும் உள்ளடங்கும். இச்செய்தியைப் பற்றி இஸ்ரேல் எந்த பதில் அறிவிப்பும் உடனே செய்யவில்லை.
காஸாவின் ஆகப் பெரிய அல் ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில் சுரங்கங்களில் ஹமாஸ் அதிகார மையத்தை செயல்படுத்தியது என்று இஸ்ரேல் கூறிவருகிறது. இதனை ஹமாஸ் மறுத்துள்ளது.
ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்துவரும் போரினால், காஸாவின் அனைத்து மருத்துவமனைகளும் செயல்படமுடியாமல் தவிக்கின்றன.
தண்ணீர், எண்ணெய், மின்சாரம், மருத்துவப் பொருட்கள், மருந்துகள் என அனைத்தும் தடைப்பட்டுள்ளதால் நோயாகிகளுக்கும் காயம் அடைந்தோருக்கும் சிகிச்சை அளிக்கமுடியாமல் காஸா மருத்துவமனைகள் உள்ளன.
மொத்தம் உள்ள 35 மருத்துவமனைகளில், தாக்குதலுக்கு உள்ளான 18 மருத்துவமனைகள் எரிவாயு இல்லாமல் செயலற்றுப்போனதாக காஸா மருத்துவ அமைச்சு கூறியது. மேலும் 40 மருத்துவ சேவை நிலையங்களும் செயலிழந்துவிட்டன.
செய்தியாளர்கள் இருக்கும்போதே அல் ஷிஃபா மருத்துவமனை கார்நிறுத்தத்தில் தஞ்சம் அடைந்திருந்த பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளான காணொளியை பாலஸ்தீன ஊடகங்கள் வெளியிட்டன. அதன் உண்மைத் தன்மை ஊர்ஜிதம் செய்யப்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
அல் ரன்டிசி, அல் நானர் ஆகிய இரு குழந்தை மருத்துவமனைகளும் இஸ்ரேலின் நேரடி தாக்குதலுக்கு உள்ளாயின என்று டாக்டர் கிட்ரா தெரிவித்தார்.

