‘காஸாவில் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு குழந்தை கொல்லப்படுகிறது’

‘காஸாவில் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு குழந்தை கொல்லப்படுகிறது’

2 mins read
cf97bbec-bbbe-4afa-8a20-6a838c4ee352
தென் காஸாவில் உள்ள ராஃபாவில் இஸ்ரேலியத் தாக்குதலில் சேதமுற்ற கட்டடத்துக்குப் பக்கத்தில் சிறார்கள் நிற்கின்றனர். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

காஸா: காஸாவில் சராசரியாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை குழந்தை ஒன்று கொல்லப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசுஸ் கூறியுள்ளார்.

ஐக்கிய நாட்டு பாதுகாப்பு மன்றத்தில் வெள்ளிக்கிழமை பேசிய அவர், “எங்கும் யாரும் பாதுகாப்பாக இல்லை,” என்று எச்சரித்தார்.

காஸாவில் இருக்கும் 36 மருத்துவமனைகளில் பாதியிலும் அதன் முதன்முறை சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் மூன்றில் இரண்டும் செயல்படவில்லை என்றும் தற்போது இயங்குபவை அவற்றின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வருவதாகவும் கூறிய அவர், சுகாதாரப் பராமரிப்பு முறை கவிழும் நிலையில் இருப்பதாகச் சொன்னார்.

“காயமடைந்தோர், உடல்நலம் குன்றியோர், இறக்கும் தறுவாயில் உள்ளோரால் மருத்துவமனைகளின் பொதுத் தாழ்வாரங்கள் நிரம்பி வழிகின்றன. சவக்கிடங்குகளும் நிரம்பிவிட்டன. மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. போர் காரணமாக இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அடைக்கலம் நாடுகின்றனர்,” என்று மன்றத்திடம் டாக்டர் டெட்ரோஸ் கூறினார்.

எத்தியோப்பியாவில் போர் சூழலில் தாம் வளர்ந்ததை நினைவுகூர்ந்த அவர், காஸாவில் சிறார்கள் சந்திக்கும் இன்னல்களை தம்மால் புரிந்துகொள்ள முடிவதாகச் சொன்னார்.

அக்டோபர் 7ஆம் தேதி முதல், காஸாவிலும் மேற்குக் கரையிலும் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் 250க்கும் அதிகமான தாக்குதல்களும் இஸ்ரேலில் 25 தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டதை உலக சுகாதார நிறுவனம் சரிபார்த்துள்ளதாக டெட்ரோஸ் தெரிவித்தார்.

இதற்கிடையே, தென் காஸாவில் மருத்துவமனைகளைக் கட்ட பணிக்குழு ஒன்றை இஸ்ரேல் அமைத்ததாக பாதுகாப்பு மன்றத்திடம் அந்நாட்டு ஐநா தூதர் கிலாட் எர்டன் கூறினார்.

“மருத்துவமனைகளை அமைப்பதன் தொடர்பில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழு, இதர ஐரோப்பிய நாடுகளுடன் இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
ஐநாஉலக சுகாதார நிறுவனம்காஸாஹமாஸ்இஸ்‌ரேல்