அரிசி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு $1.55 பில்லியன் ஒதுக்கீடு வழங்க தாய்லாந்து ஒப்புதல்

1 mins read
3caa49b4-93e6-4062-8ca0-07963affa72e
தாய்லாந்தின் சைனாட் மாகாணத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள். - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: அரிசி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 56 பில்லியன் பாட் (S$1.55 பி.) ஒதுக்கீடு வழங்க தாய்லாந்து அதன் ஒப்புதலை வழங்கியுள்ளது.

மேலும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சர்க்கரையின் விலையை 10% உயர்த்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரிசி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குச் சொந்தமான ஒவ்வொரு ‘ராய்’ (0.16 ஹெக்டர்) நிலத்துக்கும் 1,000 பாட் வழங்கப்படுவதும் உதவித் திட்டங்களில் அடங்கும்.

இந்த ஆதரவுவழி 4.68 மில்லியன் குடும்பங்கள் பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

குறைந்த விலையால் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்குக் கடந்த வாரம் 55 பில்லியன் பாட் மதிப்பிலான கடன்களுக்கு இந்த ஆதரவுத் திட்டமும் கைகொடுக்கும்.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் சர்க்கரையின் விலையை, 20% உயர்த்துவதாகச் சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசாங்கம் அம்முடிவிலிருந்து பின்வாங்கியது. இதையடுத்து, 10% உயர்வுக்கு தாய்லாந்து அமைச்சரவை செவ்வாய்க்கிழமையன்று ஒப்புதல் வழங்கியது.

பிரேசிலுக்குப் பிறகு உலகிலேயே ஆக அதிகமான சர்க்கரையை ஏற்றுமதி செய்யும் நாடு, தாய்லாந்து.

வறட்சி காரணத்தால் தாய்லாந்தின் சர்க்கரை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு 8 மில்லியன் டன் அளவிலான சர்க்கரையை தாய்லாந்து உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 2.5 மில்லியன் டன் நாட்டு மக்களின் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் என்றும் 5.5 மில்லியன் டன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அரசாங்கத் தரவுகள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்