காஸாவில் பொதுமக்கள் உயிரிழப்பைக் குறைக்க இஸ்‌ரேல் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை: நெட்டன்யாகு

காஸாவில் பொதுமக்கள் உயிரிழப்பைக் குறைக்க இஸ்‌ரேல் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை: நெட்டன்யாகு

2 mins read
162260f0-227d-42a3-942e-83ae8af0aeda
இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: காஸாவில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கப் போரிடும் இஸ்‌ரேல், அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியிருக்கிறார்.

இருப்பினும் பொதுமக்கள் உயிரிழப்பைக் குறைக்க தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்றார் அவர். அங்கிருந்து வெளியேறுமாறு துண்டுப் பிரசுரங்கள் வீசுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அவர் சுட்டினார்.

‘சிபிஎஸ்’ எனும் அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்திப் பிரிவிற்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு கூறினார்.

ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களைக் கொல்லும் இஸ்‌ரேலின் நடவடிக்கை, வெறுப்பை மனத்தில் சுமக்கும் புதிய தலைமுறைக்குத் தூண்டுகோலாக இருக்குமா என்று திரு நெட்டன்யாகுவிடம் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “அப்பாவிப் பொதுமக்கள் யார் உயிரிழந்தாலும் அது துயரத்திற்குரியது. தீங்கின் பாதையிலிருந்து பொதுமக்களை அப்புறப்படுத்த எங்களால் ஆன அனைத்தையும் நாங்கள் செய்கிறோம். ஆனால் அவர்களை அந்தப் பாதையில் தக்கவைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் ஹமாஸ் மேற்கொள்கிறது,” என்று கூறினார்.

“துண்டுப் பிரசுரங்கள் வீசுவதோடு, கைத்தொலைபேசியில் அழைத்து வெளியேறச் சொல்கிறோம். பலர் அதன்படி வெளியேறிவிட்டனர்,” என்றார் திரு நெட்டன்யாகு.

ஹமாஸ் அமைப்பை பூண்டோடு அழிப்பதே தன் ராணுவ நடவடிக்கையின் நோக்கம் என்கிறது இஸ்‌ரேல்.

“அந்தப் பணியை, முடிந்தவரை பொதுமக்கள் அதிகம் உயிரிழக்காவண்ணம் செய்ய முயல்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த முயற்சி வெற்றியடையவில்லை,” என்றார் பிரதமர் நெட்டன்யாகு.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள், இஸ்‌ரேலில் 1,200 பேரைக் கொன்றதுடன் 240 பேரைப் பிணைபிடித்ததாக இஸ்‌ரேல் கூறுகிறது.

அதைத் தொடர்ந்து இஸ்‌ரேல் மேற்கொண்ட ஆகாய, தரைவழித் தாக்குதல்களில் ஏறக்குறைய 11,500 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்களில் 4,700க்கு மேற்பட்டோர் சிறார் என்றும் காஸா கூறுகிறது.

இந்தப் போரால் 2.3 மில்லியன் பேர் வசிக்கும் காஸாவில் மூன்றில் இரு பங்கினர் வீடின்றித் தவிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்காஸாஉயிரிழப்புபேச்சுவார்த்தை