தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தோனீசியா சென்றடைந்த 500 ரோஹிங்யா அகதிகள்

2 mins read
b345b68a-5b94-4ead-9219-2af6303e2df6
அச்சே மாநிலத்தைச் சென்றடைந்த ரொஹிங்யா அகதிகள். - படம்: ஏஎஃப்பி

பிருஇயூவென் (இந்தோனீசியா): மூன்று படகுகளில் 500க்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகள் ஞாயிற்றுக்கிழமையன்று (19 நவம்பர்) இந்தோனீசியாவின் மேற்குப் பகுதியைச் சென்றடைந்ததாக ஐக்கிய நாட்டு சபையின் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டில் சிறுபான்மை இனத்தவரான ரோஹிங்யா மக்களுக்கு எதிராக மியன்மார் ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. அப்போதிருந்து பல ரொஹிங்யா மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

சில வேளைகளில் அதிக எண்ணிக்கையில் ரோஹிங்யா மக்கள் இந்தோனீசியாவுக்குச் செல்வர். ஞாயிற்றுக்கிழமையும் அப்படிப்பட்ட ஒரு நாளாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

பெரும்பான்மை முஸ்லிம்களைக் கொண்ட ரோஹிங்யா மக்கள் மியன்மாரில் பெரிய அளவிலான துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். அதனால் அவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் உயிரைப் பணையம் வைத்து தொலைதூரக் கடல் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் லேசான படகுகளில் மலேசியா அல்லது இந்தோனீசியா செல்லும் முயற்சியை மேற்கொள்கின்றனர்.

256 பேரைக் கொண்ட ஒரு படகு இந்தோனீசியாவின் அச்சே மாநிலத்தில் உள்ள பிருஇயூவென் வட்டாரத்தைச் சென்றடைந்ததாக ஐக்கிய நாட்டு சபையின் அகதிகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த திரு ஃபைசால் ரஹ்மான் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார். குறைந்தது 239 பேரைக் கொண்ட இன்னொரு படகு அச்சேயின் பிடீ வட்டாரத்தைச் சென்றடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

36 பேரைக் கொண்ட சிறிய படகு ஒன்று கிழக்கு அச்சேயைச் சென்றடைந்தது.

“அவர்கள் பல்வேறு இடங்களில் காணப்பட்டனர்,” என்று ஞாயிற்றுக்கிழமையன்று திரு ரஹ்மான் குறிப்பிட்டார்.

பிருஇயூவெனுக்குச் சென்ற படகில் இருந்த 256 பேரில் 110 பேர் பெண்கள் என்றும் 60 பேர் சிறுவர்கள் என்றும் அவர் கூறினார். அந்தப் படகைத்தான் இம்மாதம் 16ஆம் தேதியன்று இந்தோனீசியர்கள் மீண்டும் கடலுக்குள் அனுப்பியதாக அவர் சுட்டினார். அதனால் அப்படகு சில நாள்களாக இந்தோனீசியக் கடற்கரைப் பகுதிக்கு அருகே உதவியின்றி சுற்றிக்கொண்டிருந்தது என்று திரு ரஹ்மான் சொன்னார்.

கடந்த வாரம் மட்டும் 800க்கும் அதிகமான ரொஹிங்யா அகதிகள் அச்சே மாநிலத்தைச் சென்றடைந்தனர்.

குறிப்புச் சொற்கள்