பெய்ஜிங்: தொலைத்தொடர்பு மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 31,000க்கும் அதிகமானோரை மியன்மார், சீனாவிடம் ஒப்படைத்துள்ளதாக சீன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தனர்.
இவ்வாண்டு செப்டம்பர் மாதம் இருநாட்டு அதிகாரிகளும் இணைய மோசடி முறியடிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சந்தேக நபர்களில் நிதி வழங்கியதாக நம்பப்படுவோர், குற்றவாளிக் கும்பல்களின் தலைவர்கள் என்று கூறப்படுவோர் உள்ளிட்டோர் அடங்குவர் என்று சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
மியன்மாரில் மோசடி நடவடிக்கைகள் இடம்பெறும் குறைந்தது 1,000 நிலையங்கள் உள்ளன. அவற்றில் 100,000க்கும் அதிகமானோர் தொலைத்தொடர்பு மோசடிச் செயல்களில் ஈடுபடுவதாக சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மியன்மாருக்கும் தென்மேற்கு சீனாவுக்கும் இடையே எல்லைப் பகுதி உள்ளது.
சீனாவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் செப்டம்பர் மாதம் முதல் மோசடி முறியடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். நவம்பர் மாதத்தில் மியன்மாரில் உள்ள குற்றவாளிக் கும்பல்கள்மீது துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

