பெய்ஜிங்: சீனாவில் அதிகரித்து வரும் சுவாச நோய் குறித்து உலக சுகாதார நிறுவனம் விளக்கம் கேட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பெய்ஜிங் அதிகாரிகளிடம் அந்நோய் குறித்து விளக்கம் பெற சுகாதார நிறுவனம் முற்படுகிறது.
தேசிய சுகாதார ஆணையத்தின் சீன அதிகாரிகள் நவம்பர் 13ஆம் தேதி செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தினர்.
அப்போது நாட்டில் அதிகரித்து வரும் சுவாச நோய் சம்பவங்கள் பற்றி தெரிவிக்கப்பட்டதாக சுகாதார நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்தது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டதாலும் சளிக்காய்ச்சல், ‘மைக்கோபிளாஸ்மா நிமோனியா’ எனும் குழந்தைகளைப் பாதிக்கும் பொதுவான தொற்றுக் கிருமி, சுவாச ஒத்திசைவு கிருமி மற்றும் கொவிட்-19 போன்ற நோய்க் கிருமிகளால் சுவாச நோய் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
இந்த நிலையில் சுகாதாரப் பராமரிப்பு வசதிகளில் மேம்பட்ட நோய்க் கண்காணிப்பு தேவைப்படுவதை சீன அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நோயாளிகளை நிர்வகிக்க சுகாதார முறையை வலுப்படுத்த வேண்டியிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
2019 பிற்பகுதியிலும் 2020 முற்பகுதியிலும் சீனாவின் வூஹான் நகரில் பரவியதாகக் கூறப்படும் கொவிட்-19 சம்பவங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று சீன அரசாங்கமும் சுகாதார நிறுவனமும் கேள்விகளை எதிர்நோக்கின.
தொடர்புடைய செய்திகள்
இந்த நிலையில் சீனாவில் சுவாச நோய் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

