தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வடகொரிய செயற்கைக்கோளுக்கு ரஷ்யா உதவி செய்துள்ளது: தென்கொரியா

1 mins read
97d9eab2-9cb7-4a96-9ce2-a3608e6637dc
வடகொரியாவின் வேவுப் பணிக்கான செயற்கைக்கோளை ஏந்திச் செல்லும் உந்துகணை, நவம்பர் 21ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

சோல்: வடகொரியா, நவம்பர் 21ஆம் தேதி, அதன் வேவுப் பணிக்கான செயற்கைக்கோளை ஏந்திச் செல்லும் உந்துகணையை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ரஷ்யா அதற்கு உதவி செய்ததாகத் தென்கொரியா கூறியுள்ளது.

உளவுத்துறைத் தகவலை மேற்கோள்காட்டி தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு கூறினர்.

அந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சியில் வடகொரியா ஏற்கெனவே இரண்டு முறை தோல்வியுற்றது.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் செப்டம்பரில் ரஷ்யா சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்தார். அப்போது, பியோங்யாங் செயற்கைக்கோள்களை உருவாக்க உதவுவதாக திரு புட்டின் உறுதியளித்திருந்தார்.

அதன் பிறகு, முன்னர் தோல்வியில் முடிந்த முயற்சிகளின் தரவுகளை வடகொரியா ரஷ்யாவிற்கு அனுப்பியதாகவும் ரஷ்ய வல்லுநர்கள் அவற்றை ஆய்வுசெய்ததாகவும் தென்கொரியா கூறியது.

குவாமில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை தங்கள் செயற்கைக்கோள் படமெடுத்து அனுப்பியதாகவும் நவம்பர் 22ஆம் தேதி, திரு கிம் அவற்றைப் பார்வையிட்டதாகவும் வடகொரியாவின் அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.

வடகொரியா அது தொடர்பான காணொளியை வெளியிட்டால் மட்டுமே அந்தத் தகவலின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய இயலும் என்கிறது தென்கொரியா.

குறிப்புச் சொற்கள்