சிட்னி: ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரப் பகுதியில் பருவநிலை மாற்றம் குறித்து சனிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தால் நாட்டின் ஆகப் பெரிய நிலக்கரி ஏற்றுமதித் துறைமுகத்தில் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்குப் பொறுப்பேற்ற பருவநிலை ஆர்வலர் குழுவான ‘ரைசிங் டைட்’, அதில் சுமார் 1,500 பேர் கலந்துகொண்டதாகக் கூறியது. அவர்களில் 300 பேர், நியூகாசல் துறைமுகத்துக்கு அருகே கப்பல்கள் செல்லும் பாதையில் இருந்தனர்.
அந்தத் துறைமுகத்திலிருந்து 500,000 டன் எடை கொண்ட நிலக்கரி கொண்டுசெல்லப்படுவதைத் தடுக்க ரைசிங் டைட் முற்படுவதாக அக்குழு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இந்தோனீசியாவுக்கு அடுத்ததாக உலகின் ஆகப் பெரிய நிலக்கரி ஏற்றுமதியாளரான ஆஸ்திரேலியாவில் பருவநிலை மாற்றம் பிரிவினையை ஏற்படுத்தும் விவகாரமாக உள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் தொடர்பில் கைது நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை என்று நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.

