சீனாவில் பரவும் சுவாச நோய்; மருந்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்து

சீனாவில் பரவும் சுவாச நோய்; மருந்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்து

2 mins read
2c470939-b9a4-4aea-9e0d-26e1c09ba990
பெய்ஜிங்கில் சிறார் மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்கும் பெற்றோர். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீனாவில் கடந்த சில நாள்களாக சுவாச நோய் பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகளிடையே அந்நோய் பரவுகிறது.

இதனைச் சமாளிக்க சீன அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில் மருந்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகளை சுகாதார அமைச்சு வலியுறுத்தியது.

கொவிட்-19 கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட பிறகு முதல் குளிர் காலத்தில் சுவாச நோய் அதிகரித்து வருகிறது.

இந்தப் பிரச்சினை சீனாவை மட்டுமல்லாமல் உலகளாவிய பிரச்சினையாகவும் உருவெடுத்து வருகிறது.

கடந்த வாரம் உலக சுகாதார நிறுவனம், சுவாச நோய் பரவல் குறித்த விவரங்களை சீனா வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

குறிப்பிட்ட இடத்தில் பல குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை அது சுட்டிக்காட்டியிருந்தது.

கடந்த 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வூஹான் நகரில் முதல் முதலாக கொள்ளைநோய் பரவியபோது சீனாவும் உலக சுகாதார நிறுவனமும் கேள்விக்கணைகளால் துளைக்கப்பட்டன. நோய்ப் பரவல் குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொள்வதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று அப்போது பரவலாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் புதிய அல்லது வழக்கத்திற்கு மாறான நோய்க்கிருமிகள் அண்மைய சுவாச நோய் சம்பவங்களில் கண்டறியப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் மி ஃபெங், கடுமையான சுவாச நோய் அதிகரிப்புக்கும் சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பல வகையான நோய்க்கிருமிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்றார்.

“சுவாச நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக மருந்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும். சேவை நேரத்தை நீட்டித்து மருந்து விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்,” என்று திரு மி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

பள்ளிகள், குழந்தைப் பராமரிப்பு, கல்வி நிலையங்கள், தாதிமை இல்லங்கள் போன்ற முக்கியமான நெரிசலான இடங்களில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகையாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பெய்ஜிங், லியானிங் உள்ளிட்ட வடக்கு வட்டாரங்களில் குழந்தைகளிடையே சுவாச நோய் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அத்தகைய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் நீண்டநேரம் காத்திருக்க நேரிடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்