மத்திய கிழக்கு பூசலைப் பயன்படுத்தி நன்கொடை மோசடி: நிபுணர்கள் எச்சரிக்கை

2 mins read
cce95426-ffe5-4cd7-9dda-673e09432946
மக்களின் புலம்பல்களையும் வேதனைகளையும் பயன்படுத்தி உணவு, மருந்துகள் வாங்க நன்கொடை வசூலிக்கும் போலி இணையத்தளங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்து உள்ளன. - படம்: ஏஎஃப்பி

மத்திய கிழக்கில் நிகழ்ந்து வரும் பூசலைப் பயன்படுத்தி நன்கொடை என்ற பெயரில் மோசடிகள் நடைபெறுவதாக நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

அந்த வகையில், மோசடிக்காரர்களோடு தொடர்புடைய வங்கிக் கணக்குகளில் இதுவரை US$1.6 மில்லியன் (S$2.1 மில்லியன்) கிரிப்டோகரன்சி எனப்படும் மின்னிலக்க நாணயம் மாற்றப்பட்டு உள்ளது.

இதனை நெட்கிராஃப்ட் எனப்படும் பிரிட்டிஷ் இணையப் பாதுகாப்பு நிறுவனம் கண்டறிந்து உள்ளது.

நன்கொடை வசூலிப்பதற்காக மின்னஞ்சல், இணையத்தளம், சமூக ஊடகக் கணக்குகள் ஆகியவற்றை போலியாக உருவாக்குவதோடு போலி தொலைபேசி அழைப்புகளையும் ஏமாற்றுக்காரர்கள் மேற்கொள்வதாக அந்நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.

மின்னிலக்க நாணயங்களை மாற்றுவதற்கான முகவரிகளைப் பட்டியலிட்டு அவற்றுக்கு நன்கொடைகளை அனுப்புமாறு மோசடிக்காரர்கள் கேட்டுக்கொள்வர்.

அவர்கள் குறிப்பிடும் மின்னிலக்க நாணய முகவரிகளில் பணத்தை அப்படியே சுரண்டிவிடக்கூடிய மென்பொருள் நிறுவப்பட்டு இருக்கும். நன்கொடை அளித்த மறுகணமே அதனை அளித்தவரின் மின்னிலக்க நாணயக் கணக்கிலிருந்து எல்லாப் பணமும் எடுக்கப்பட்டுவிடும்.

நவம்பர் 25ஆம் தேதி தமது வலைப்பூ பதிவில் நெட்கிராஃப்ட் இது தொடர்பான பல தகவல்களை வெளியிட்டு உள்ளது.

“கிரிப்டோ நாணயங்களை அடியோடு சுரண்டும் இணையத் தாக்குதல் குறித்து 2023 மார்ச் மாதமே வலைப்பூ பதிவில் தெரிவித்தோம். சிலிகான் வேலி வங்கி மூடப்பட்ட விவகாரத்தில் இந்தத் தாக்குதல் முக்கியத்துவம் வகித்தது.

“அதுபோன்ற அணுகுமுறை காஸா பூசலைப் பயன்படுத்தி நன்கொடை என்ற பெயரில் தற்போது மேற்கொள்ளப்படுகிறது,” என்று நெட்கிராஃப்ட் குறிப்பிட்டு உள்ளது.

அமெரிக்காவின் எஃப்பிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பும் மத்திய வர்த்தக ஆணையமும் காஸா பூசலைப் பயன்படுத்தும் இதேபோன்ற மோசடிகளைக் கண்டறிந்து எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளன.

உலகளவிலான பெரும்பூசல்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவது வளர்ந்துவருவதாக குரூப்-ஐபி எனப்படும் இணையப் பாதுகாப்பு நிறுவனம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தது.

பூசல் சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள மக்களின் உணர்ச்சிபூர்வ கொந்தளிப்பைப் பயன்படுத்தி அவசரமான ஒரு சூழ்நிலையை உருவாக்கி மோசடி அரங்கேற்றப்படுவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டது.

“பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்துகளோடு மற்ற பொருள்களும் வாங்க அவசரமாக நன்கொடை தேவைப்படுவதாகவும் மின்னிலக்க நாணயம்வழியான நன்கொடைகளை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்து போலி இணையத்தளங்கள் பணம் பறிக்கின்றன.

“நேரடியாகத் தொகைகளை நன்கொடைக்கான இணையத்தளங்களில் அனுப்புமாறும் மோசடிக்காரர்கள் கேட்டுக்கொள்வார்கள்,” என்று குரூப்-ஐபி நிறுவனத்தின் மின்னிலக்கப் பாதுகாப்புப் பிரிவின் செயலாக்க இயக்குநரான விளாடிமிர் காலுகின் தெரிவித்து உள்ளார்.

காஸா போர் தொடங்கியதில் இருந்து விடுக்கப்பட்டு வரும் மனிதாபிமான உதவி அழைப்புகளுக்கு சிங்கப்பூர் மக்கள் மதிப்பளித்து வருகின்றனர்.

இருப்பினும், மோசடிகளுக்கு யாரும் ஆளாகிவிட வேண்டாம் என மெர்சி ரிலீஃப் என்னும் அமைப்பின் தலைவரான சத்வந்த் சிங் எச்சரித்து உள்ளார்.

“மனித இனம் பாதிக்கப்படும்போது மக்கள் இரக்கப்படுவது பொதுவானதுதான். இருப்பினும் நாம் அனுப்பும் பணமும் நன்கொடைகளும் சரியான அமைப்பிடம் போய்ச் சேருகின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்