இஸ்லாமாபாத்: சிறையில் உள்ள பாகிஸ்தானிய முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வழக்கு விசாரணைக்காக திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
அவரது உயிருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்ததாக அவருடைய வழக்கறிஞர் கூறினார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக இம்ரான் கானின் வழக்கு விசாரணையை சிறை வளாகத்தில் நடத்துவது சட்டவிரோதமானது என கடந்த வாரம் தீர்ப்பளித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், நீதிமன்றத்தில் அதை நடத்த உத்தரவிட்டிருந்தது.
அரசாங்க ரகசியங்களை வெளியிட்டதாக இம்ரான் கான் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அதை அவர் மறுத்துள்ளார்.
பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து அரசியல், சட்ட ரீதியிலான பிரச்சினையில் இம்ரான் கான் சிக்கியுள்ளார்.
2018 முதல் 2022 வரை பிரதமர் பதவியில் இருந்தபோது அரசாங்க அன்பளிப்புகளைச் சட்டவிரோதமாக விற்றதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மூவாண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போதிலிருந்து அவர் பொதுவெளியில் காணப்படவில்லை.
கடந்த மாதம் இம்ரான் கான் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதில் இருந்து சிறப்பு நீதிமன்றம் ஒன்று சிறையில் வழக்கு விசாரணை நடத்தி வருகிறது.

