40 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்த யானையின் உடலைப் பாதுகாக்க ஆலோசனை

1 mins read
9e56953a-15c0-42ba-8eaf-9cfa0757de1b
மணிலா விலங்குத் தோட்டத்தில் இருந்த மாலி என்று பெயரிடப்பட்ட யானை செவ்வாய்க்கிழமை மாண்டது. - படம்: ஏஎஃப்பி

மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் இருக்கும் விலங்குத் தோட்டத்தில் வாழ்ந்த மாலி எனும் பெண் யானையின் உடலைப் பாதுகாப்பது குறித்து அந்நகரின் அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

செவ்வாய்க்கிழமையன்று மாண்ட மாலியின் உடல் அரும்பொருளகம் ஒன்றில் பாதுகாக்கப்படக்கூடும் என்று மணிலா மேயர் ஹனி லக்கூனா கூறினார். அதுகுறித்து வல்லுநர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மணிலா விலங்குத் தோட்டத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனிமையில் வாழ்ந்த மாலி இதய செயலிழப்புக்குப் பலியாகியிருக்கலாம் என்று விலங்குத் தோட்டத்தின் தலைமை விலங்கு மருத்துவர் டாக்டர் ஹைன்ரிக் பேட்ரிக் பின்யா-டொமிங்கோ சொன்னார்.

மாலி, உலகின் ஆக சோகமான யானைகளில் ஒன்று என்று விலங்குநல ஆர்வலர்கள் கூறியுள்ளனர். அதன் வயது என்னவாக இருக்கும் என்பதற்குக் குறிப்பிட்ட தகவல்கள் இல்லை. மாலிக்கு 48 அல்லது 49 வயதிருந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

மணிலா விலங்குத் தோட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த மாலி யானை, 1977ஆம் ஆண்டு இலங்கையால், அன்றைய பிலிப்பீன்ஸ் அதிபரின் மனைவி இமெல்டா மார்க்கோசுக்குப் பரிசாக வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்