தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹமாஸ் விடுவித்த 17 தாய்லாந்து ஊழியர்கள் நாடு திரும்பினர்

1 mins read
8366aa83-68a0-40ac-bd99-d37846705e1c
ஹமாஸ் குழு விடுவித்த தாய்லாந்துவாசிகள் பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையம் வந்திறங்கினர். அவர்களில் 36 வயது பெண் ஒருவரும் இருந்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: காஸாவில் ஹமாஸ் குழுவால் பிணை பிடிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட 17 தாய்லாந்து தொழிலாளர்கள் வியாழக்கிழமை (நவம்பர் 30) நாடு திரும்பினர்.

அவர்கள் அனைவரும் பேங்காக் விமான நிலையத்தில் வந்து இறங்கியதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சு செய்தியாளர்களிடம் கூறியது.

அந்த 17 பேரையும் வரவேற்க அவர்களின் குடும்பத்தினர் பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

இதுவரை 9,000 தாய்லாந்துவாசிகள் நாடு திரும்பி உள்ளனர். அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் தொடங்கியபோது ஹமாஸ் போராளிகள் தாய்லாந்தைச் சேர்ந்த 39 பேரை சுட்டுக்கொன்றதோடு 32 பேரைக் கடத்திச் சென்றதாக தாய்லாந்து அரசாங்கம் கூறியது. 

இஸ்ரேலில் பணிபுரியச் சென்ற தாய்லாந்து நாட்டவர்களில் பெரும்பான்மையினர் வடகிழக்கு தாய்லாந்தின் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். தங்களது குடும்பங்களுக்கு அதிக சம்பளத்தை அனுப்பும் நோக்கில் அவர்கள் அங்கு சென்று வேலை செய்வதாகத் தெரிய வந்துள்ளது.

போர் தொடங்குவதற்கு முன்னர் வரை இஸ்ரேலின் வேளாண்மைத் துறையில் ஏறக்குறைய 30,000 தாய்லாந்து நாட்டவர்கள் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

நீட்டிக்கப்பட்ட போர்நிறுத்தம் நல்லதொரு அறிகுறி என்றும் தாய்லாந்துவாசிகள் உள்ளிட்ட அனைத்து பிணையாளர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்றும் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்த தாவிசின் நம்புவதாக அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்