சீனாவில் அதிகரிக்கும் சுவாச நோய்ச் சம்பவங்களுக்கும் கொவிட்-19 கிருமிக்கும் தொடர்பில்லை: வல்லுநர்கள்

1 mins read
a799b7b6-3ac5-42c9-9ea3-b238fdb19b5f
2020ல் விதிக்கப்பட்ட கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகான முதல் குளிர்காலப் பருவத்தில் சீனாவில் புதிய சுவாச நோய்ப் பரவல் அதிகரித்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: சீனாவில் அண்மையில் அதிகரித்துவரும் சுவாச நோய்ப் பரவலுக்கும் கொவிட்-19 கிருமிக்கும் தொடர்பில்லை என்று அந்நாட்டுச் சுகாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

புதிய சுவாச நோய், கொவிட்-19 கிருமியின் திரிபாலோ அந்தக் கிருமித்தொற்றால் விளைந்த நோய் எதிர்ப்புச் சக்திக் குறைபாட்டாலோ ஏற்பட்டதன்று என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

அண்மையில் பரவும் சுவாச நோயை ஏற்படுத்தும் கிருமிக்கும் கொவிட்-19 கிருமிக்கும் உள்ள வித்தியாசத்தை, மனிதர்களுக்கும் ஈக்களுக்கும் உள்ள வித்தியாசத்துடன் ஒப்பிடலாம் என்று ஷங்காயில் உள்ள தொற்றுநோய் சிகிச்சைக்கான தேசிய நிலையத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.

கொவிட்-19 கிருமியின் புதிய திரிபால்தான் அண்மைய சுவாச நோய் ஏற்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலை அடுத்து அவரது கருத்து வெளியானது.

அண்மைய சுவாச நோய்ப் பரவலுக்குக் காரணமான கிருமி, 1900களின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை பெய்ஜிங் சுவாச நோய் சிகிச்சைக் கழக இயக்குநர் தெரிவித்தார்.

2020ல் விதிக்கப்பட்ட கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகான முதல் குளிர்காலப் பருவத்தில் சீனாவில் புதிய சுவாச நோய்ப் பரவல் அதிகரித்துள்ளது. சென்ற வாரம், சீன அதிகாரிகள் அதுபற்றிய தரவுகளை உலகச் சுகாதார நிறுவனத்திடம் பகிர்ந்தனர்.

குறிப்புச் சொற்கள்