வாஷிங்டன்: அமெரிக்காவில் பல மாதங்களாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்ட 20 வயது இந்திய மாணவரை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
‘மனிதாபிமானமற்ற செயல்’ என வர்ணிக்கப்பட்ட இச்சம்பவத்தில் அந்த மாணவருக்குக் கழிவறை வசதி மறுக்கப்பட்டது.
தம் உறவினரிடமும் இரு ஆடவர்களிடமும் மோசமாக அடிவாங்கிய அந்த மாணவர், அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் மூன்று வீடுகளில் மாதக்கணக்கில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்.
அந்த மாணவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், அந்த மாணவருக்கு நேர்ந்த அவலநிலை குடியிருப்பாளர் ஒருவரின் கவனத்துக்கு வர, காவல்துறைக்கு அவர் தகவல் அளித்தார்.
கடந்த புதன்கிழமை செயிண்ட் சார்ல்ஸ் கவுண்டி பகுதியில் உள்ள வீட்டிற்குச் சென்ற காவல்துறை, அங்கு வெங்கடேஷ் ஆர். சத்துரு, ஸ்ரவன் வர்மா, நிகில் வர்மா எனும் மூவரைக் கைது செய்தனர்.
ஆட்கடத்தல், துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள்மீது வியாழக்கிழமை சுமத்தப்பட்டது.
அந்த மாணவர் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட மூன்று வீடுகளும் சத்துருவுக்குச் சொந்தமானவை.
தொடர்புடைய செய்திகள்
தற்போது பாதுகாப்பாக உள்ள அந்த மாணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. துன்புறுத்தப்பட்ட அவருக்கு எலும்பு முறிவுகளும் சிராய்ப்புக் காயங்களும் ஏற்பட்டன.
குற்றஞ்சாட்டப்பட்ட அந்த ஆடவர்கள், அந்த மாணவரை ஏழு மாதங்களாக வீட்டின் கீழ்த்தளத்தில் அடைத்து வைத்து, கழிவறை வசதியைக் கூட வழங்காமல், கான்கிரீட் தரையில் படுக்கக் கட்டாயப்படுத்தியதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜோ மேக்குலோக், “ஒரு மனிதர் மற்றொரு மனிதரை இப்படிக் கொடுமை செய்வது மனிதாபிமானமற்றது, நியாயமற்றது,” என்று வர்ணித்தார்.
மிசூரி அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பயிலும் நோக்கில் அந்த மாணவர் கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்றார்.
மாறாக, கடந்த ஆண்டு ஏப்ரலில் சத்துருவின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அதிகாலை 4.30 மணிக்குத் தொடங்கி வீட்டு வேலைகளை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார். சத்துருவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு பின்னர் மாலை நேர வேலைகளையும் அவர் செய்ய வேண்டியிருந்தது.
இந்நிலையில், அந்த மாணவர் துன்புறுத்தப்பட்ட சம்பவத்தில் ஆடவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதி குடியிருப்பாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.