தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைதி உடன்படிக்கை முறிவு: இரண்டாவது நாளாகத் தொடரும் சண்டை

2 mins read
cc13f6ac-adc4-420a-a473-41cf9712c5bd
மீண்டும் போர் தொடங்கியுள்ளதால் பாதுகாப்பான இடம் என்று கருதப்படும் மேற்குப் பகுதிகளை நோக்கி காஸா மக்கள் செல்லத் தொடங்கியுள்ளனர்.  - படம்: ஏஎஃப்பி

காஸா: ஹமாஸ் போராளிகளுடனான சண்டை நிறுத்த உடன்படிக்கையில் முறிவு ஏற்பட்டுள்ளதால் காஸா மீது இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல்.

ஒரு வாரமாக காஸாவில் நீடித்த சண்டை நிறுத்தம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 1ஆம் தேதி) காலை முடிவுக்கு வந்தது. இஸ்ரேலின் குண்டுவீச்சு நடவடிக்கை சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு தடையாக இருப்பதாக சமரசப் பேச்சாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் அதிகமாக இருந்ததாகவும் அப்பகுதி புகை மண்டலமாக மாறியதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை தாக்குதலில் மட்டும் 184 பேர் கொல்லப்பட்டதாகவும், குறைந்தது 589 பேர் காயமடைந்ததாகவும் காஸா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமானதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

மீண்டும் போர் தொடங்கியுள்ளதால் பாதுகாப்பான இடம் என்று கருதப்படும் மேற்குப் பகுதிகளை நோக்கி காஸா மக்கள் செல்லத் தொடங்கியுள்ளனர்.

குண்டு வீச்சுக்கு பதிலடி தரும் விதமாக ஹமாஸ் போராளிகள் தெற்கு இஸ்ரேலில் உள்ள நகர்கள் மீது ஏவுகணைகளைப் பாய்ச்சியுள்ளனர். அந்தத் தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது பற்றிய தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

சண்டை நிறுத்த உடன்படிக்கையில் முறிவு ஏற்பட்டதற்கு இரண்டு தரப்புகளும் ஒன்றை ஒன்று மாறிமாறி குறைகூறி வருகின்றன.

பிணைக் கைதிகளாக இருக்கும் அனைத்து பெண்களையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் கேட்டுவருகிறது. ஆனால் ஹமாஸ் பிணைக் கைதிகளாக இருக்கும் பெண் ராணுவ வீராங்கனைகளை விடுவிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சண்டை நிறுத்தத்தின் போது ஹமாஸ் போராளிகளிடம் இருந்த இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு பிணைக் கைதிகள் சிலரும் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட பாலஸ்தீனக் கைதிகள் சிலரும் தினமும் விடுவிக்கப்பட்டனர். இது போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்த்த நேரத்தில் மீண்டும் போர் வெடித்துள்ளது.

இந்நிலையில் சமரசப் பேச்சை தொடர்ந்து நடத்தவுள்ளதாக கத்தார் தெரிவித்துள்ளது.

தான் விடுவிக்க வேண்டிய பிணைக் கைதிகளின் பட்டியலை ஹமாஸ் தரவில்லை அதனால் தான் மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது என்று அமெரிக்கா கூறுகிறது. இருப்பினும் சமரசப் பேச்சைத் தொடர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அது தெரிவித்துள்ளது.

மீண்டும் சண்டை தொடங்கியது மனிதாபிமான அவசரநிலையை தீவிரமாக்கி நிலைமையை மோசமாக்கும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 240 பேர் பிணை கைதிகளாக இழுத்துச் செல்லப்பட்டனர். அதற்குப் பதிலடியாக காஸாமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏறக்குறைய 15,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்