தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடுத்த ஆண்டு இந்தியப் பயணிகள் செல்ல விரும்பும் நாடுகள் இவை

2 mins read
c558f13b-8894-4294-a49e-e60db2b9d40e
இந்தியப் பயணிகள் செல்ல விரும்பும் நாடுகளின் பட்டியலில் துபாயும் இடம்பெற்றுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

துபாய், தாய்லாந்து, பாலி, சிங்கப்பூர் என மக்களிடையே பிரபலமாகிவரும் இடங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால் வரும் 2024ஆம் ஆண்டில் இந்தியச் சுற்றுப்பயணிகள் எங்கே செல்ல ஆவலாக உள்ளனர்?

இந்தியப் பயணிகளைக் குறிவைத்து விசா இன்றி பயணம் மேற்கொள்ளும் திட்டங்களைப் பல நாடுகள் அறிவித்து வருகின்றன.

அண்மையில் இந்தோனீசியாவும் அந்தப் பட்டியலில் சேர்ந்துகொண்டது.

இந்தியா உள்பட 20க்கும் அதிகமான நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று அது டிசம்பர் 7ஆம் தேதியன்று அறிவித்தது.

இந்தியப் பயணிகள் தாய்லாந்தின் பேங்காக், பட்டாயா ஆகிய நகரங்களுக்குச் செல்ல அதிகம் விரும்புகின்றனர்.
இந்தியப் பயணிகள் தாய்லாந்தின் பேங்காக், பட்டாயா ஆகிய நகரங்களுக்குச் செல்ல அதிகம் விரும்புகின்றனர். - படம்: பட்டாயா பயணத்துறை

அதற்கு முன், தாய்லாந்தும் இலங்கையும் இதேபோன்ற விசா தேவைப்படாத முன்னோடித் திட்டங்களைத் தொடங்கின.

இரு நாடுகளின் திட்டமும் அடுத்த ஆண்டு மே, மார்ச் மாதங்களில் முடிவடைவதாக அறியப்படுகிறது.

இதற்கிடையே, இந்தியப் பயணிகளுக்கும் சீனப் பயணிகளுக்கும் இதேபோன்ற விசா இல்லாத அனுமதியை வழங்கத் திட்டமிடுவதாக வியட்னாமும் அறிவித்துள்ளது.

இந்திய நாட்டவர் 2019ஆம் ஆண்டில் தங்களின் பயணத் திட்டங்களுக்காக $150 பில்லியன் செலவழித்தனர்.

இந்தத் தொகை இன்னும் ஆறு ஆண்டுகளில் $410 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் மாதம் Booking.com என்ற பயணத் தளம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியப் பயணிகள் மேற்கொள்ளும் பயணங்கள் 2030ஆம் ஆண்டில் சுமார் 5 பில்லியனாக இருக்கும் என்று கூறப்பட்டது.

விசா இல்லாத அனுமதி குறித்து நாடுகள் அறிவித்து வரும் நிலையில் மக்களிடையே ஆர்வமும் அதிகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

பிரபல மின்னிலக்கப் பயணத் தளமான Agoda வெளியிட்ட தரவுகளின்படி தாய்லாந்தின் தலைநகரான பேங்காக் தற்போது ஆக அதிகமாகப் பதிவுசெய்யப்பட்ட பயண இடமாகத் திகழ்கிறது.

இந்தியர்களிடையே பேங்காங், துபாய், பாலி, சிங்கப்பூர், பட்டாயா ஆகிய இடங்கள் பிரபலமாக உள்ளதென Agoda அறிக்கை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்