தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தோனீசியா சென்றடைந்த 400 ரோஹிங்யா அகதிகள்

2 mins read
4ede01ee-a725-4bff-9aa8-1d7bf1854880
ஞாயிற்றுக்கிழமையன்று இந்தோனீசியா சென்றடைந்த ரோஹிங்யா அகதிகள். - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: சுமார் 400 ரோஹிங்யா அகதிகளைக் கொண்ட பாழடைந்த படகுகள் ஞாயிற்றுக்கிழமையன்று இந்தோனீசியாவின் அச்சே மாநிலத்தைச் சென்றடைந்தன.

அப்பகுதி மீனவர் சமூகத்தின் தலைவர் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

அண்மைக் காலமாக அதிக எண்ணிக்கையில் ரோஹிங்யா அகதிகள் இந்தோனீசியாவுக்குச் செல்கின்றனர். இதற்கு முன்பு நவம்பர் மாதம் 1,200 ரொஹிங்யா அகதிகள் இந்தோனீசியாவைச் சென்றடைந்ததாக ஐக்கிய நாட்டு சபையின் அகதிகள் அமைப்பு (யுஎன்ஹெச்சிஆர்) தெரிவித்தது.

ரோஹிங்யா அகதிகள் இருந்த இரண்டு படகுகள் ஞாயிற்றுக்கிழமை காலை அச்சே வந்து சேர்ந்ததாக அப்பகுதியின் மீனவர் சமூகத் தலைவர் மிஃப்டா கட் அடே கூறினார். பிடீ வட்டாரத்தில் ஒரு படகும் அச்செ பெசார் வட்டாரத்தில் மற்றொரு படகும் வந்து சேர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு படகிலும் கிட்டத்தட்ட 200 ரோஹிங்யா அகதிகள் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

சுமார் 180 ரோஹிங்யா அகதிகள் காலை நான்கு மணியளவில் பிடீ வட்டாரத்தில் வந்து சேர்ந்ததாக உள்ளூர் ராணுவ அதிகாரியான அண்டி சுசாந்தோ கூறினார். இதன் தொடர்பில் தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியதாகவும் அவர் சொன்னார்.

இரண்டாவது படகு ஒன்று வந்ததையும் திரு சுசாந்தோ உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் அது எங்கு சென்றது, எத்தனை பேர் அதில் இருந்தனர் போன்ற விவரங்கள் தங்களிடம் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

அண்மைக் காலமாக அதிக எண்ணிக்கையில் ரோஹிங்யா அகதிகள் இந்தோனீசியாவுக்கு வருவதற்குப் பின்னால் ஆள்கடத்தல் நடவடிக்கை காரணமாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுவதாக வெள்ளிக்கிழமையன்று இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். நிலைமையைக் கையாள அனைத்துலக அமைப்புகளுடன் இணைந்து செயல்படப் போவதாகவும் அவர் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்