பேங்காக்: தாய்லாந்து மன்னரை இழிவுபடுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மூவ் ஃபார்வர்ட் கட்சியின் (எம்எஃப்பி) நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) ஒருவருக்கு ஆறு ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் தலைவர் இதைத் தெரிவித்தார்.
திருவாட்டி ருக்சானொக் ஸ்ரீநொர்க் மன்னரை இழிவுபடுத்தியது நிரூபிக்கப்பட்டது. எக்ஸ் சமூக ஊடகத்தில் இடம்பெற்ற இரண்டு பதிவுகளைப் பகிர்ந்ததால் அவர் கணினிக் குற்றங்கள் சட்டத்தை மீறியதும் நிரூபணமானது.
தாய்லாந்தில் இவ்வாண்டு மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எம்எஃப்பி கட்சி ஆக அதிக இடங்களில் வெற்றிபெற்றது. எனினும், மன்னரை இழிவுபடுத்துவதற்கு எதிரான சட்டங்களை மறுசீரமைக்கப்போவதாக எம்எஃப்பி கட்சியின் வாக்குறுதியை எதிர்த்து பழைமைவாதிகள் அக்கட்சி ஆட்சி அமைப்பதைத் தடுத்தனர்.
தாய்லாந்தில் மன்னரை இழிவுபடுத்துவதைத் தடுக்க மிகக் கடுமையான சட்டங்கள் நடப்பில் உள்ளன.
“மன்னரை இழிவுபடுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு, கணினி குற்றங்கள் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஆகிய இரண்டும் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து ருக்சானொக் ஸ்ரீநொர்க்கிற்கு ஒவ்வொன்றுக்கும் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது,” என்று எம்எஃப்பி தலைவர் சாய்த்தாவாட் டுலாத்தோன் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
29 வயது ருக்சானொக் புதன்கிழமையன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். அவர் பிணைத் தொகையாக 500,000 பாட்டைச் (18,800 வெள்ளி) செலுத்தினார்.
பொதுத் தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டபோது திருவாட்டி ருக்சானொக், தலைநகர் பேங்காக்கில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலைகளில் சைக்கிளில் வலம் வந்தார். அந்நிகழ்வு அவரைப் பிரபலமாக்கியது.

