காஸா மனிதாபிமான நெருக்கடிக்கு சிங்கப்பூர் ஆழ்ந்த கவலை

காஸா மனிதாபிமான நெருக்கடிக்கு சிங்கப்பூர் ஆழ்ந்த கவலை

2 mins read
eba7d993-7336-43df-8b9c-ef48c28ae317
காஸாவில் கடந்த பத்து வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 18,700க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

வாஷிங்டன்: காஸாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலவரம் குறித்து சிங்கப்பூர் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி உள்ளது. காஸாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கான அவசியத்தை அது கோடிட்டுக் காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மன்றத்துக்கான சிங்கப்பூரின் நிரந்தரப் பிரதிநிதியும் தூதருமான புர்ஹான் கஃபூர், நியூயார்க் பொதுச் சபைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றினார்.

“காஸாவில் நிலவும் மோசமான மனிதாபிமான நிலவரம் குறித்து சிங்கப்பூரின் ஆழ்ந்த கவலையை பதிவு செய்ய விரும்புகிறேன்.

“அங்கு ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களின் உயிர் பறிபோகும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது,” என்றார் அவர்.

மூன்றரை மணி நேரம் நீடித்த பொதுச் சபை கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் உரையாற்றினர்.

காஸாவில் உடனடி போர்நிறுத்தத்தை வலியுறுத்தி டிசம்பர் 12ஆம் தேதி ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக அவர்கள் குரல் கொடுத்தனர்.

ஐநா பாதுகாப்பு மன்றத்தில் போர்நிறுத்தத் தீர்மானத்தை டிசம்பர் 8ஆம் தேதி அமெரிக்கா தனது ரத்து அதிகாரம் மூலம் எதிர்ப்பைத் தெரிவித்ததற்குப் பிறகு ஐநா அவசரக் கூட்டத்தில் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிங்கப்பூர் அதற்கு ஆதரவாக வாக்களித்தது.

193 உறுப்பு நாடுகளில் 153 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் அமெரிக்கா, இஸ்ரேல் போன்றவை உள்ளிட்ட பத்து நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 23 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

“உடனடி போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்தை சிங்கப்பூர் ஆதரிக்கிறது. போர்நிறுத்தம் என்பது காஸா முழுவதும் மனிதாபிமான உதவிகள் தங்குதடையின்றி கிடைப்பதற்கான அத்தியாவசிய, அவசரத் தேவை,” என்றார் திரு கஃபூர்.

கடந்த பத்து வாரங்களாக வான்வழியாகவும் தரைவழியாகவும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 18,700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், பல்லாயிரம் பேரைக் காணவில்லை. அவர்களில் பலர் மாண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்