சோல்: தென்கொரியாவின் தலைநகர் சோல் நகரில் மாணவர் துன்புறுத்தல் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஆரம்பப் பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவர்களிலிருந்து உயர் நிலைப் பள்ளி இறுதியாண்டு மாணவர் வரை 486,769 மாணவர்கள் ஆய்வில் பங்கேற்றனர் என்று சோல் மாநகர கல்வி அலுவலகம் தெரிவித்தது.
இதில் 2.2 விழுக்காட்டினர், பள்ளியில் ஏதேனும் ஒரு வகையில் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், அதாவது பத்து ஆண்டுகளில் இரண்டு விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
தென் கொரியாவின் சட்டம், பள்ளி வன்முறையை பள்ளிக்கு உள்ளே அல்லது வெளியே உள்ள மாணவர்களுக்கு எதிரான செயல்களை வரையறுக்கிறது.
உடல் அல்லது மனரீதியாக காயப்படுத்துதல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல். மிரட்டுதல், பாலியல் வன்முறை, அவதூறு, மிரட்டிப் பணம் பறித்தல், வற்புறுத்தல், இணையம் மற்றும் நேரடியாக துன்புறுத்தல் ஆகியவற்றை அது உள்ளடக்கியிருக்கிறது.
ஆய்வில் 4.6 விழுக்காடு ஆரம்பப் பள்ளி மாணவர்கள் வன்முறைகளுக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளனர். நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 1.6 விழுக்காட்டினரும் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 0.4 விழுக்காட்டினரும் அவ்வாறு தெரிவித்துள்ளனர்.
கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு நேரடியாக வகுப்புகள் நடத்தப்படுவதால் பள்ளிகளில் வன்முறை அதிகரித்திருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
“கொவிட்-19 தொற்றின்போது மாணவர்களிடையே நேரடி தொடர்பு இல்லை. ஆனால் தற்போது மாணவர்கள் நேரடி வகுப்புக்குத் திரும்பியுள்ளனர். இதனால் ஒருவருக்கு ஒருவர் நேரடியாக சர்ச்சையில் ஈடுபடும்போது வன்முறை அதிகரித்திருக்கலாம்,” என்று அவர்கள் கூறினர்.

