தவறுதலாகக் கொல்லப்பட்ட இஸ்ரேலிய பிணைக் கைதிகள் வெள்ளைக் கொடி வைத்திருந்தனர்

தவறுதலாகக் கொல்லப்பட்ட இஸ்ரேலிய பிணைக் கைதிகள் வெள்ளைக் கொடி வைத்திருந்தனர்

1 mins read
0b736c2c-66b2-4850-8e0b-c62cd609cab2
காஸா எல்லைக்கு அருகே உள்ள தெற்கு இஸ்ரேலியப் பகுதி. - படம்: ஏஎஃப்பி

டெல் அவிவ்: இஸ்ரேலிய ராணுவம் தவறுதலாகக் கொன்ற மூன்று பிணைக் கைதிகள் வெள்ளைக் கொடி காட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக் கட்ட விசாரணையில் இந்த விவரம் தெரிய வந்ததாக இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். ‌

சண்டை தீவிரமாக இருந்த வட காஸாவின் ஷெஜாயா பகுதியில் இஸ்ரேலிய ராணுவப் படைகளைச் சேர்ந்த ஒருவர் அந்தப் பிணைக் கைதிகளைக் கண்டிருக்கிறார். அப்பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் பொதுமக்களைப் போல் ஆடைகள் அணிந்து ஏமாற்று உத்திகளில் ஈடுபடுவதுண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பிணைக் கைதிகள் சட்டை அணியாமல் இருந்ததாகவும் வெள்ளைத் துணியைக் கொண்ட கோலை அவர்கள் வைத்திருந்ததாகவும் தகவல் வழங்கிய இஸ்ரேலிய ராணுவ அதிகாரி தொலைபேசி மூலம் செய்தியாளர்களிடம் சொன்னார். பிணைக் கைதிகளை மிரட்டலாகப் பார்த்த இஸ்ரேலியப் படைகளைச் சேர்ந்தவர் அவர்களை நோக்கிச் சுட்டதாக ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

அந்த பிணைக் கைதிகள் பயங்கரவாதிகள் என்று தவறாக வகைப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரு பிணைக் கைதிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். காயமடைந்த மூன்றாவது பிணைக் கைதி அருகில் இருந்த கட்டடத்தில் பதுங்கி ஹீப்ரு மொழியில் உதவிக்கு அழைத்திருக்கிறார்.

அப்போது சண்டையைத் தற்காலிகமாக நிறுத்துமாறு படைத் தளபதி உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் அவ்வேளையில் அந்தப் பிணைக் கைதிமீது மேலும் ஒரு தாக்குதல் நிகழ்ந்ததைத் தொடர்ந்து அவரும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்