ஹமாஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தை: நெட்டன்யாஹுவின் அறிகுறி

ஹமாஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தை: நெட்டன்யாஹுவின் அறிகுறி

2 mins read
2661cb78-c071-4092-8754-dd4087b41f7b
காஸாவின் ராஃபா நகரில் இஸ்ரேலிய தாக்குதலால் ஏற்பட்ட சேதம். - படம்: ராய்ட்டர்ஸ்

டெல் அவிவ்: ஹமாஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடப்பதை உறுதிப்படுத்துவதுபோல் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் ஹமாஸ், பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருப்போரை மீட்கும் நோக்கில் இஸ்ரேலிய தரப்பில் பேச்சுவார்த்தைகளை வழிநடத்தும் அதிகாரி, கத்தார் பிரதமரைச் சந்தித்ததாகத் தகவல்கள் வெளியாயின. இஸ்ரேல், ஹமாஸ் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் கத்தார் நடுவராக இருந்து வந்துள்ளது.

காஸாவில் இஸ்ரேலியப் பிணைக் கைதிகள் தவறுதலாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இச்செய்தி வெளியானது.

இஸ்ரேல் தரப்பில் பேச்சுவார்த்தைகளை வழிநடத்தும் திரு டேவிட் பார்னியா, கத்தார் பிரதமர் ‌ஷேக் முகம்மது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜசிம் அல் தானி இருவருக்கும் இடையே ஐரோப்பாவில் பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாகக் கூறப்படுவதன் தொடர்பில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் திரு நெட்டன்யாஹுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.

எனினும், பேச்சுவார்த்தை நடத்தும் குழுவுக்கு என்ன செய்யவேண்டும் என்பதைத் தாம் விளக்கியதை அவர் உறுதிப்படுத்தினார்.

“கத்தாரிடம் எங்களுக்குப் பல குறைகள் உள்ளன. அவை உங்களுக்குத் தெரிய வரலாம். ஆனால் இப்போதைக்கு பிணைக் கைதிகளாக உள்ள எங்கள் மக்கள் அனைவரையும் மீட்கும் முயற்சியில்தான் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்,” என்று ஹமாஸ், இஸ்ரேலின் பரம எதிரியான ஈரான் ஆகியவற்றுடன் கத்தாருக்கு இருக்கும் தொடர்பு குறித்து திரு நெட்டன்யாஹு பேசினார்.

இதற்கிடையே, மேற்குக் கரையில் வெவ்வேறு இஸ்ரேலிய தாக்குதல்களில் ஒரு பதின்ம வயது இளையர் உட்பட மூன்று பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அதோடு, காஸாவில் தனது ஒளிப்பதிவாளர் மாண்டது குறித்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் அதிகாரபூர்வமாக புகார் அளிக்கப்போவதாக அல்-ஜஸீரா ஊடகம் கூறியுள்ளது. சமெர் அபு டக்கா என்ற அந்நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் வெள்ளிக்கிழமையன்று நிகழ்ந்த வானூர்தித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள கமால் அத்வான் எனும் மருத்துவமனையை இஸ்ரேலிய ராணுவப் படையினர் பல நாள்கள் சோதனையிட்டத்தைத் தொடர்ந்து அங்கு பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த மருத்துவமனையில் பல ஆயுதங்களைப் பறிமுதல் செய்ததாக இஸ்ரேலிய ராணுவம் சொன்னது.

குறிப்புச் சொற்கள்