வடமேற்கு சீனாவில் நிலநடுக்கம்; 120க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

2 mins read
7dd7cfaf-c2d5-4774-b84f-7ffa32b0bab9
கான்சு வட்டாரத்தில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: சிசிடிவி13
multi-img1 of 2

பெய்ஜிங்: சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (டிசம்பர் 18) இரவு 11.59 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குறைந்தபட்சம் 127 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கான்சு மாநிலத்தில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் கூறியது. மாநிலத் தலைநகர் லான்சோவிலிருந்து ஏறக்குறைய 100 கி.மீ. தென்மேற்கே அது மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக சீன அரசாங்க ஊடகம், டிசம்பர் 19ஆம் தேதி தெரிவித்தது.

இடிபாடுகளில் சிக்கியோரைத் தேடி மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கான்சு மாநிலத்தில் வலுவான நிலநடுக்கம் உலுக்கியதில் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் மேலும் 400 பேர் காயமடைந்ததாகவும் வட்டார நிவாரணத் தலைமையகத்தை மேற்கோள்காட்டி அரசாங்க ஒலிபரப்பு நிறுவனமான சிசிடிவி தகவல் வெளியிட்டுள்ளது.

கான்சு மாநிலத்திற்கு அருகிலுள்ள சிங்காய் வட்டாரத்தின் ஹய்டோங் நகரில் 11 பேர் மாண்டதாகவும் 100க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சிசிடிவி கூறியது.

நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்தது உள்ளிட்ட பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் பீதியடைந்த மக்கள் பாதுகாப்புக் கருதி வீடுகளைவிட்டு வெளியேறி வீதிகளில் ஓடியதாகவும் அரசாங்க ஊடகமான சின்ஹுவா தெரிவித்தது.

டிசம்பர் 19ஆம் தேதி அதிகாலையில் மீட்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். சீன அதிபர் ஸி ஜின்பிங், மீட்பு, நிவாரணப் பணிகள் மற்றும் உயிர்பிழைத்தோரின் பாதுகாப்பையும் அவர்களது சொத்துகளின் பாதுகாப்பையும் உறுதிசெய்வது ஆகியவற்றில் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

நிலநடுக்கத்துக்குப் பிந்திய நில அதிர்வுகளும் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. கான்சுவிலிருந்து 570 கி.மீ. தொலைவில் உள்ள ஷான்சி பகுதியிலும் அந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகக் கூறிய சின்ஹூவா செய்தி நிறுவனம், ரிக்டர் அளவுகோலில் அது 6.2ஆகப் பதிவானதாகக் குறிப்பிட்டது.

நிலநடுக்கத்தை அடுத்து சில கிராமங்களில் மின்சாரம், தண்ணீர் விநியோகம் தடைபட்டதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்