தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐநா வாக்கெடுப்பு மீண்டும் தாமதம்; சண்டை தீவிரம்

2 mins read
ae45cfb3-9d67-4d94-bfbd-24be98ae7c0e
ரஃபா நகரில் செவ்வாய்க்கிழமை வீடு ஒன்றின் மீது இஸ்ரேலியப் படையினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பாலஸ்தீனப் பொதுமக்கள் அந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

கெய்ரோ/காஸா: மனிதாபிமான உதவியை அதிகரிப்பதற்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாக்கெடுப்பு தாமதமாகி இருக்கும் வேளையில் காஸாவில் புதன்கிழமை சண்டை தீவிரமடைந்தது.

காஸாவின் இரண்டாவது பெரிய நகரான ரஃபாவின் வீதிகளில் இஸ்ரேலிய துருப்பினரும் ஹமாஸ் போராளிகளும் துப்பாக்கிகளால் மாறி மாறி சுட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போரில் ஹமாஸ் போராளிகளைத் துடைத்தொழிக்கும் முயற்சியில் இஸ்ரேல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அதன் காரணமாக காஸா மக்களில் கிட்டத்தட்ட 20,000 பேர் உயிரிழந்துவிட்டனர். பலர் தங்களது வீட்டை இழந்து வீதிக்கு வந்துவிட்டனர். இன்னும் பலர் பசியால் வாடுகின்றனர். இந்த விவரங்களை பாலஸ்தீன் சுகாதார அமைச்சு வெளியிட்டது.

அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று உலக நாடுகள் குரல் எழுப்பி வரும் வேளையில், எஞ்சி இருக்கும் 129 பிணையாளிகளை ஹமாஸ் விடுவிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அறிவித்து உள்ளார்.

காஸாவில் தவிக்கும் மக்களுக்குத் தேவைப்படும் நிவாரணப் பொருள்களை விநியோகிக்கும் அமைப்புகளை நிறுவுவதற்கான ஐநா பாதுகாப்பு மன்றத்தின் வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமையும் நடைபெறாமல் ஒரு நாள் தள்ளிப்போய்விட்டது.

மூன்றாம் முறையும் அமெரிக்கா தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி உணவு விநியோகத் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்திவிடாமல் இருப்பதற்கான முயற்சிகளும் பேச்சுவார்த்தைகளும் தொடர்வதன் காரணமாக வாக்கெடுப்பு தாமதமாகி உள்ளது.

ஐக்கிய அரபு சிற்றரசுகள் உருவாக்கிய அந்த வரைவு தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை கடந்த திங்கட்கிழமை நடத்த 15 உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய பாதுகாப்பு மன்றம் முடிவு செய்திருந்தது.

ஆயினும், அமெரிக்காவுக்கும் ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து அந்த வாக்கெடுப்பு முதன்முறை தள்ளிப்போனது.

குறிப்புச் சொற்கள்