ஃபீனிக்ஸ்: அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் ஒரு வீட்டில் தீ மூண்டதால் ஐந்து சிறுவர்கள் மாண்டனர்.
இச்சம்பவம் புல்ஹெட் சிட்டி நகரில் நிகழ்ந்தது. தீ மூண்ட வீட்டிலிருந்து மாண்ட அந்த ஐந்து சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
அவர்களில் நால்வர் ஆண்கள். ஒருவர் பெண்.
மாண்ட சிறுவர்களில் நால்வர் சகோதரர்கள் என்று கேடிவிகே 3டிவி செய்தி நிறுவனம் தெரிவித்தது. அது அரிஸோனா தலைநகர் ஃபீனிக்சைச் சேர்ந்த ஊடகம். மாண்ட சிறுவர்கள் இரண்டிலிருந்து 13 வயதுக்கு உட்பட்டவர்கள்.
அவர்களின் தந்தை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பொருள்கள் வாங்க வெளியே சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மாண்ட ஐந்தாவது சிறுவனுக்கு 11 வயது என்றும் அவர் மற்ற நால்வரைச் சந்திக்கச் சென்ற உறவினர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
உள்ளுர் நேரப்படி சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு முன்பு தீ மூண்டதாக நம்பப்படுகிறது. வீட்டின் முதல் தளத்தில் மூண்ட தீ பின்னர் அங்கிருந்த ஒரே மாடிப்படி வழியாகப் பரவியதாகக் கருதப்படுகிறது. விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் இவ்வாறு கூறினர்.
மாண்ட ஐவரின் உடல்களும் ஒரே படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.

