$5.1 மி. முதலீடு செய்வோருக்குக் குடியுரிமை வழங்கும் ஹாங்காங்

1 mins read
6faa4c6f-c3ad-4ff3-9d2d-30a822b25e6b
புதிய திட்டம் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. - கோப்புப் படம்: ஹாங்காங்

ஹாங்காங்: ஹாங்காங்கில் 30 மில்லியன் ஹாங்காங் டாலர் (5.1 மில்லியன் வெள்ளி) முதலீடு செய்வோருக்கு அந்நகரம் குடியுரிமை வழங்கவிருக்கிறது.

அதற்கு வழிவகுக்கும் திட்டத்தை ஹாங்காங் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. நிதி மையமாக மீண்டும் உருவெடுக்கவும் வருவாயை அதிகரிக்கவும் அந்நகரம் எடுக்கும் முயற்சிகளில் இந்நடவடிக்கை அடங்கும்.

புதிய திட்டம் 2024ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தொடங்கும். அதன்கீழ் ஹாங்காங் அரசாங்கத்துக்குச் சொந்தமான ஹாங்காங் இன்வெஸ்ட்மென்ட் கோர்ப் நிறுவனம் நிர்வகிக்கும் திட்டம் ஒன்றில் கட்டாயமாக மூன்று மில்லியன் ஹாங்காங் டாலரை முதலீடு செய்யவேண்டும்.

உள்ளூர் தொழில்நுட்ப, புத்தாக்க முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பது இதன் இலக்கு. குடியிருப்பாளர் சொத்துச் சந்தை முதலீடுகள் இதில் அடங்கமாட்டா.

இம்முயற்சியின் மூலம் ஆண்டுதோறும் ஹாங்காங்கிற்கு 120 பில்லியன் ஹாங்காங் டாலர் (20.4 பில்லியன் வெள்ளி) வருவாய் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நகரின் நிதி, நிதிச் சேவை செயலாளர் கிரிஸ்டஃபர் ஹுய் தெரிவித்தார். ஆண்டுதோறும் 4,000 பேர் இத்திட்டத்தில் பங்கேற்பர் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்