தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘தென்சீனக் கடலில் பிலிப்பீன்ஸ் மோதலைத் தூண்டவில்லை’

1 mins read
7e051072-639f-4716-9b5f-3c14b703e69a
தென்சீனக் கடல் தொடர்பாக சீனாவுக்கும் பிலிப்பீன்சுக்கும் அடிக்கடி பல கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

மணிலா: தென்சீனக் கடலில் சீனாவுடன் மோதல் ஏற்படும் வகையில் தூண்டிவிடும் நடவடிக்கைகளில் பிலிப்பீன்ஸ் ஈடுபடவில்லை என்று பிலிப்பீன்ஸ் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் டிசம்பர் 26ஆம் தேதியன்று தெரிவித்தார்.

தனது கட்டுப்பாட்டில் இருக்கும் கடற்பகுதிக்குள் பிலிப்பீன்ஸ் அத்துமீறி நுழைவதாக சீனா கம்யூனிஸ்ட் கட்சி நாளிதழான பீப்பள்ஸ் டெய்லி வெளியிட்ட கருத்துக்கு அவர் விளக்கமளித்தார்.

அனைத்துலகச் சட்டத்துக்கு உட்பட்டு பிலிப்பீன்ஸ் நடந்துகொள்வதாக கர்னல் மெடெல் அகுயிலார் உறுதி அளித்தார்.

பிலிப்பீன்ஸ் கடற்பகுதியின் எல்லைக்குள், பிலிப்பீன்சின் தனிப்பட்ட பொருளியல் மண்டலத்துக்குள் மட்டுமே பிலிப்பீன்ஸ் கடற்படை செயல்படுவதாக அவர் கூறினார்.

அமெரிக்காவுடன் இணைந்து பிலிப்பீன்ஸ், தென்சீனக் கடலில் மோதலைத் தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

அத்தகைய நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானவை என்றும் வட்டாரத்தின் அமைதியையும் நிலைத்தன்மையையும் அவை சீர்குலைத்துவிடும் என்றும் சீனா எச்சரிக்கை விடுத்தது.

தென்சீனக் கடலில் இருக்கும் கப்பல்கள், கடலோடிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பிலிப்பீன்ஸ் செயல்படவில்லை என்று கர்னல் அகுயிலார் தெரிவித்தார்.

ஆனால் சீனா அபாயகரமான பல நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் குறைகூறினார். இதனால் சில சமயங்களில் கடலில் விபத்துகள் ஏற்படுவதாக அவர் கூறினார்.

“சீனாதான் விதிமீறல்களில் ஈடுபடுகிறது,” என்று கர்னல் அகுயிலார் குற்றம் சாட்டினார்.

குறிப்புச் சொற்கள்