ஜெனீவா: காஸாவில் வாழும் மக்கள் பேராபத்தில் உள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது.
பசி, போரால் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடி போன்றவை காஸா மக்களை அவதிப்பட வைப்பதாக அந்த அமைப்பு கூறியது.
செவ்வாய்க்கிழமையன்று இரண்டு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவப் பொருள்களை கொடுத்து உதவியதாக உலகச் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது. இருப்பினும், காஸாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 15 மருத்துவமனைகள் மருத்துவ பொருள்கள் இல்லாமல் தடுமாறி வருவதாக அது கவலை தெரிவித்தது.
அனைத்துலக சமூகங்கள் உடனடியாக ஒன்றுகூடி காஸா மக்களை ஆபத்தில் இருந்து காக்க வேண்டும். காயம், பசி, சுகாதார நெருக்கடி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசுஸ் கூறியுள்ளார்.
மருத்துவப் பொருள்களைக் கொண்டு சென்ற வாகனங்களை உணவு வழங்கும் வாகனங்கள் என்று நினைத்து காஸா மக்கள் மீண்டும் நிறுத்தியதாக அவர் தெரிவித்தார்.
எப்படியாவது உணவு, உதவி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் காஸா மக்கள் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் மருந்துகள், மருத்துவப் பொருள்கள், எரிபொருள் போன்றவை சரியான நேரத்திற்குச் செல்வதில் சிக்கல் எழுவதாகவும் டெட்ரோஸ் குறிப்பிட்டார்.
உலகச் சுகாதார நிறுவன ஊழியர்கள் பாதுகாப்பும், அமைப்பின் தொடர் உதவிகளும் சரியாக நடக்க வேண்டும் என்றால் காஸாவில் உடனடியாக அதிக அளவில் உணவுகள் கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
காஸாவில் உடனடியாக சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும், பொதுமக்களுக்கு வேண்டிய மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்று ஐக்கிய நாட்டுப் பொதுச் சபை தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது. இருப்பினும் இஸ்ரேல் காஸா மீதான தாக்குதலை நிறுத்தவில்லை.
தாக்குதலுக்கு அஞ்சி மருத்துவமனைகள், பாதுகாப்பு முகாம்கள் போன்ற இடங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
காஸாவின் ஹமாஸ் போராளிகள் அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்தினர். இதில் 1,140 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பிணைக் கைதிகளாக போராளிகள் இழுத்துச் சென்றனர். அவர்களில் 129 பேர் இன்னும் பிணைக் கைதிகளாக ஹமாஸிடம் உள்ளனர்.
ஹமாஸ் போராளிகளைத் துடைத்தொழிக்க வேண்டும் என்று இஸ்ரேல், காஸா மீது கடுமையான பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. அதில் இதுவரை 21,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மாண்டவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள், பெண்கள் என்று பாலஸ்தீன அமைப்புகள் கூறுகின்றன.