பிரிட்டன்: உயிர்நீத்தவர்கள் பிழைத்து மீண்டும் உலகில் வாழ்ந்ததாகக் கூறினால் அதை ஆதாரமற்ற கற்பனைக் கதை என்றே நாம் கருதுவோம்.
ஆனால், பிரிட்டனின் நார்த் யார்க்ஷையரில் ஒரு பெண், மாண்டுவிட்டதாக மருத்துவர்கள் கூறி 40 நிமிடங்கள் கழித்துப் பிழைத்தெழுந்துள்ளார்.
கிறிஸ்டி போர்டோஃப்ட் எனும் அப்பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவரும் அவர் கணவரும் இரவு விருந்துண்ணத் திட்டமிட்டிருந்தபோது கிறிஸ்டி வீட்டிலேயே மயங்கி விழுந்தார்.
கணவர் ஸ்டு, விரைவாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது கிறிஸ்டியின் உயிரை மீட்க மருத்துவர்கள் மிகவும் போராடினர். அவர் உயிர் பிழைக்க மிகக் குறைந்த வாய்ப்பே இருப்பதாகக் கூறினர்.
கிறிஸ்டிக்கு சிலமுறை மாரடைப்பு ஏற்பட்டது. கோமா நிலைக்குச் சென்றார். ஆனால் மருத்துவர்கள் உட்பட அனைவரும் அதிசயிக்கும் வகையில் 40 நிமிடங்கள் கழித்து கிறிஸ்டி உயிருடன் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
அந்த 40 நிமிடங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ‘த மெட்ரோ’ செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“என் குடும்பத்தினருக்கு மட்டுமே நான் மருத்துவமனையில் இருந்தது தெரியும். ஆனால் என் தோழி ஒருவர் என் சகோதரியைத் தொடர்புகொண்டு நான் அவரது வீட்டில் இருப்பதாகவும் என் மகன்களுக்கும் அப்பாவிற்கும் சில குறிப்புகளை எழுதச் சொல்வதாகவும் கூறினாராம். நான் அவரிடம் என் உடல் உடைந்து விழுவதாகவும் என்னால் அதனுள் மீண்டும் செல்ல முடியாது என்று நினைப்பதாகவும் கூறியபோது என் தோழி உறுதியான குரலில் மீண்டும் உடலுக்குள் செல்லும்படி சொன்னதாக என் சகோதரியிடம் கூறினாராம்,” என்றார் கிறிஸ்டி.
“அதேநேரம், மருத்துவமனையில் என் குடும்பத்தாரிடம் என் வாழ்வு முடியப்போகிறது என்று மருத்துவர்கள் கூறினர். உடலை விட்டு நீங்கியதாக உணர்ந்த நான் மீண்டும் என் உடலில் நுழைந்த பிறகு என்னை எப்படி குணப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரிந்திருந்தது. மீண்டும் பிழைத்தெழுந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
கிறிஸ்டிக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் அவரது நுரையீரலுக்கோ இதயத்திற்கோ எந்தச் சேதமும் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மனித மூளைக்கு 5 முதல் 10 நிமிடங்கள் உயிர்வாயு (ஆக்சிஜன்) கிடைக்காவிட்டால் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்பதைக் குறிப்பிட்ட மருத்துவர்கள், கிறிஸ்டி மீண்டும் உயிர்பெற்றதை நம்ப இயலவில்லை என்று கூறுகின்றனர்.

