உக்ரேனுக்கு 200 தற்காப்பு ஏவுகணைகளை வழங்கும் பிரிட்டன்

உக்ரேனுக்கு 200 தற்காப்பு ஏவுகணைகளை வழங்கும் பிரிட்டன்

1 mins read
59f4abee-df84-4427-aa63-95e8371900d3
டிசம்பர் 29ஆம் தேதி ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலால் பொதுமக்களில் 18 பேர் மாண்டதாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும் கியவ் கூறுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: உக்ரேனுக்கு ஏறக்குறைய 200 தற்காப்பு ஏவுகணைகளை வழங்குவதாக பிரிட்டன் கூறியுள்ளது.

உக்ரேனியப் பொதுமக்களையும் அந்நாட்டின் உள்கட்டமைப்பையும் ரஷ்யத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் அந்த உதவி வழங்கப்படுவதாக பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சு டிசம்பர் 29ஆம் தேதி தெரிவித்தது.

உக்ரேனியப் போரில் ஆகப் பெரிய அளவில் மாஸ்கோ நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்ததாக கியவ் தெரிவித்த வேளையில் பிரிட்டனின் உதவி குறித்த தகவல் வெளியானது.

“ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், உக்ரேனின் தற்காப்புத் திறனையும் மேற்கத்திய நாடுகளின் திறனையும் சோதிக்கிறார். தோல்வியின் பிடியிலிருந்து மீண்டு வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் அவர் இவ்வாறு செய்கிறார். ஆனால் அவரது நடவடிக்கை தவறானது,” என்று பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சர் கிரான்ட் ஷாப்ஸ் கூறினார்.

“உக்ரேன் இப்போரில் வெற்றிபெறத் தேவையானவற்றை வழங்க, உலகின் இதர நாடுகள் ஒன்றுகூடி இருமடங்கு முயற்சி செய்யவேண்டிய தருணம் இது,” என்றார் அவர்.

லண்டன் உக்ரேனுக்கு அனுப்பியுள்ள ஏவுகணைகள் பிரிட்டனில் தயாரானவை. அவற்றை ‘டைஃபூன்’, ‘எஃப்-35’ போன்ற ரகங்களைச் சேர்ந்த போர் விமானங்களிலிருந்து பாய்ச்ச முடியும் என்று பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சு கூறியது.

அடுத்த ஈராண்டுகளில் உக்ரேனுக்கு மொத்தம் 4.6 பில்லியன் பவுண்ட் ($7.7 பில்லியன்) மதிப்பிலான ராணுவ உதவி வழங்க பிரிட்டன் உறுதியளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்