தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்‌ரேலியத் தாக்குதலில் 24 மணி நேரத்தில் ஏறக்குறைய 200 பேர் கொல்லப்பட்டனர்

2 mins read
6396ff87-2cf0-4ce9-aca6-e6f301b4f5e8
இஸ்ரேலியத் தாக்குதலில் மாண்ட 8 வயது இரட்டைப் பிள்ளைகளின் சடலங்களின்முன் கதறி அழும் தாயார். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

காஸா: இஸ்‌ரேலிய ராணுவத்துக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான உக்கிரமான போரில் 24 மணி நேரத்தில் ஏறக்குறைய 200 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கான் யூனிஸ் நகரில் வெள்ளிக்கிழமை (டிச. 29) இரவு, இஸ்ரேலியப் படையினர் தரைவழித் தாக்குதலுடன் ஆகாயத் தாக்குதலும் நடத்தியதாகக் குடியிருப்பாளர்கள் கூறினர்.

இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நடந்ததன் அறிகுறியாக குண்டு முழக்கங்களைக் கேட்டதாகக் குடியிருப்பாளர்கள் கூறிய வேளையில், நுசைரட் முகாமில் ஆகாயத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவ உதவியாளர்களும் பாலஸ்தீனச் செய்தியாளர்களும் கூறினர்.

கான் யூனிசில் மேலும் முன்னேறும் நோக்கில் அங்கு கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளது இஸ்ரேலிய ராணுவம். ஏற்கெனவே டிசம்பர் தொடக்கத்தில் அந்நகரின் சில பகுதிகளை அது கைப்பற்றியது.

துருப்பினர், ஹமாசின் தளபத்திய நிலையங்களையும் ஆயுதக் கிடங்குகளையும் நோக்கி முன்னேறுவதாக இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் யோவ் காலன்ட் கூறினார்.

காஸாவிலுள்ள ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாருக்குச் சொந்தமான ஒரு வீட்டின் நிலவறை சுரங்க வளாகத்தை அழித்துவிட்டதாக இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

கிட்டத்தட்ட 12 வாரங்களுக்கு முன்னர் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இஸ்‌ரேல் மீது நடத்திய திடீர்த் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 240 பேர் பிணை பிடிக்கப்பட்டனர்.

அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மேற்கொள்ளும் போரில் காஸா எல்லைப் பகுதி பெரும்பாலும் அழிந்துவிட்டது.

ஹமாஸ் கிளர்ச்சியாளர்களைத் துடைத்தொழிக்கும்வரை போர் ஓயாது என்கிறது இஸ்ரேல்.

போரை முன்னிட்டு காஸாவில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு வெளியேற வேண்டியுள்ள நிலையில், அங்கு வசிக்கும் கிட்டத்தட்ட 2.3 மில்லியன் பேர் குறைந்தது ஒருமுறையாவது இடம் பெயர நேரிட்டது.

தற்காலிக முகாம்களில் சிலர் தஞ்சம் புகுந்துள்ளனர். வெட்டவெளியில் தார்பாலின், பிளாஸ்டிக் விரிப்புகளுக்கடியில் சிலர் அடைந்துகிடக்கின்றனர்.

இஸ்ரேலியத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 187க்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதை காஸா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்தப் போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 21,507 ஆனது. இது காஸாவின் மொத்த மக்கள்தொகையில் ஏறக்குறைய ஒரு விழுக்காடு ஆகும்.

மேலும் பலரின் சடலங்கள் இடிபாடுகளில் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
காஸாஇஸ்‌ரேல்