நியூயார்க்கில் ரயில் விபத்து; 24 பேர் காயம்

நியூயார்க்கில் ரயில் விபத்து; 24 பேர் காயம்

படம்: நியூயார்க் நகர அவசர சேவை நிர்வாகம் / எக்ஸ்

05 Jan 2024 - 12:51 pm

1 mins read

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேன்ஹேட்டன் பகுதியில் வியாழக்கிழமையன்று சுமார் 300 பயணிகள் இருந்த சுரங்கப் பாதை ரயில் ஒன்று, பழுதுபார்ப்பு ரயிலுடன் மோதியது.

அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பழுதுபார்ப்பு ரயில் தடம்புரண்டதாக நியூயார்க் நகர போக்குவரத்து ஆணைய (எம்டிஏ) அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் மூன்று மணியளவில் வெஸ்ட் 96வது ஸ்திரீட்டுக்கு அருகே இச்சம்பவம் நிகழ்ந்தது. இதில் 24 பேர் காயமுற்றனர்.

காயமடைந்தோரில் குறைந்தது எட்டு பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டது. யாருக்கும் மோசமான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

சம்பவத்தின்போது விபத்துக்கு உள்ளான பழுதுபார்ப்பு ரயிலில் நான்கு ஊழியர்கள் இருந்தனர். விபத்துக்கு ரயில் கருவியில் ஏற்பட்ட கோளாறு  காரணமாக இருந்ததாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

விபத்து நிகழ்ந்தபோது பாதிக்கப்பட்ட பயணிகள் ரயிலுக்குப் பின்னால் இருந்த ரயிலில் இருந்து 400 பயணிகள் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்