தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குறிப்பிட்ட இடங்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தவுள்ள இஸ்‌ரேல்

2 mins read
70bc52e4-7fd8-4b66-83dc-0260470c1e64
இஸ்‌ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவில் பல வீடுகள் சேதமடைந்தன. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெருசலம்: இஸ்‌ரேல் அதன் போர் உத்தியில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. காஸாவில் தனது தாக்குதல் இலக்குகளை அதிகப்படுத்த உள்ளதாக அது கூறியது.

இதன்மூலம் ஹமாஸ் அமைப்பின் தலைவர்களையும் போராளிகளையும் வேரோடு அழிப்பதே அதன் குறிக்கோள்.

இதற்கிடையே, காஸா வட்டாரம் மீது இஸ்‌ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனால் ஏற்கெனவே வீடுகளை இழந்து தவிக்கும் பாலஸ்தீனக் குடும்பங்கள் கழுதைகள் இழுத்துச் செல்லும் வண்டிகள் மூலம் அங்கிருந்து வெளியேற நேரிட்டது.

ஜனவரி 4ஆம் தேதியன்று காஸா மீது இஸ்‌ரேல் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மாண்டோரில் 16 பேர் கான் யூனிஸ் நகரில் இருந்தவர்கள் என்று காஸா சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

உயிரிழந்தவர்களில் ஒன்பது பேர் சிறுவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இஸ்‌ரேல் நடத்திய மற்றொரு வான்வழித் தாக்குதலில் அகதி முகாமில் இருந்த கார் வெடித்துச் சிதறி ஐந்து பாலஸ்தீனர்கள் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, போருக்குப் பின் காஸா வட்டாரத்தை நிர்வகிக்கும் முறை தொடர்பாக தமது திட்டத்தை இஸ்‌ரேலியத் தற்காப்பு அமைச்சர் யோவேவ் கெலன்ட் முன்வைத்துள்ளார்.

போர் முடிவுக்கு வந்ததும் அந்தப் பாலஸ்தீனப் பகுதியை ஹமாஸ் அமைப்போ அல்லது இஸ்‌ரேலோ நிர்வகிக்காது என்று அவர் கூறினார்.

இந்தத் திட்டம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அதன்பிறகு பரிந்துரைகளை இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் அவர் சமர்ப்பிப்பார்.

போருக்குப் பிறகு காஸா வட்டாரம் யாருடைய கட்டுப்பாட்டின்கீழ் இருக்க வேண்டும் என்பது குறித்து திரு நெட்டன்யாகுவின் அமைச்சரவையில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

2007ஆம் ஆண்டிலிருந்து அந்தப் பகுதி ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்