டிரம்ப் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு

1 mins read
47780630-3164-4dad-897f-2d2788ddf181
டிரம்ப் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது பிப்ரவரி 8ஆம் தேதி விசாரணை நடத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கொலராடோ நீதிமன்றத் தடைக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உள்ளது.

இந்த மனுவை விரைந்து விசாரிக்குமாறு நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வாய்மொழி வாக்குவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொலராடோ மாகாணத்தில் நடைபெறவிருந்த குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளருக்கான வாக்கெடுப்பில் டிரம்ப் பங்கேற்க கொலராடோ நீதிமன்றம் கடந்த மாதம் தடை விதித்தது.

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தமக்கு ஏற்பட்ட தோல்வியை ஏற்க மறுத்த டிரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்றத்தை நோக்கி ஆவேசமாகச் சென்ற டிரம்ப்பின் ஆதரவாளர்கள், நாடாளுமன்றக் கட்டடம் மீது தாக்குதல் நடத்தினர்.

அந்தத் தாக்குதலை நடத்த டிரம்ப் தமது ஆதரவாளர்களைத் தூண்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

டிசம்பர் மாதம் இந்த விவகாரத்தை முன்வைத்து, கொலராடோ மாகாண குடியரசுக் கட்சிக்கான அதிபர் வேட்பாளர் போட்டியில் பங்கேற்க டிரம்ப்புக்குத் தடை விதிக்கப்பட்டது.

கொலராடோ நீதிமன்றம் விதித்த அந்தத் தடைக்கு எதிராக டிரம்ப் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்