தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடுத்த தலைமுறை அணுமின் திட்டத்தில் $508 மி. முதலீடு செய்யும் பிரிட்டன்

2 mins read
e374b576-2694-4bd0-8621-0b2ed867ef7b
ஹிங்லீ பாயிண்ட் - படம்: ஏஎஃப்பி

லண்டன்: பிரிட்டன், அடுத்த தலைமுறை அணுமின் உலைகளில் பயன்படக்கூடிய, மேம்பட்ட அணுசக்தி எரிபொருளைத் தயாரிப்பதற்கான புதிய திட்டத்தில் 300 மில்லியன் பவுண்ட் ($508 மில்லியன்) முதலீடு செய்யத் திட்டமிடுகிறது.

அனைத்துலக அளவில் முக்கிய விநியோகிப்பாளர் என்ற நிலையிலிருந்து ரஷ்யாவை நீக்குவது இதன் நோக்கம்.

2050ஆம் ஆண்டுக்குள் உலகின் அணுசக்தித் திறனை மும்மடங்காக்க அண்மையில் உறுதிபூண்ட 20க்கு மேற்பட்ட நாடுகளில் பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், தென்கொரியா போன்றவையும் அடங்கும்.

பருவநிலையைப் பாதிக்கும் கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் அனைத்துலக முயற்சியின்கீழ் இந்த நாடுகள் அந்த உறுதிமொழியில் கையொப்பமிட்டன.

இந்நிலையில், குறைவாகச் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் உள்நாட்டு உற்பத்திக்கு இந்தப் புதிய முதலீடு உதவும் என்கிறது பிரிட்டன். தற்போது இதை வர்த்தக ரீதியில் ரஷ்யா மட்டுமே தயாரித்துவருகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் ராணுவம், 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரேன் மீது படையெடுத்ததை அடுத்து, எரிசக்திக்கு ரஷ்யாவைச் சார்ந்திருக்கும் போக்கைக் குறைத்துக்கொள்ள ஐரோப்பிய நாடுகள் முயல்கின்றன. அதேபோல, பிரிட்டனும் இந்த முயற்சியை மேற்கொள்கிறது.

“புதிய திட்டத்தின் மூலம், பிரிட்டன் உலகிற்கு அணுமின் நிலைய எரிபொருளை விநியோகிக்க இயலும். அத்துடன் ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்த முடியும்,” என்று பிரிட்டனின் எரிசக்திப் பாதுகாப்புத் துறையின் அறிக்கை குறிப்பிடுகிறது.

2030ஆம் ஆண்டுக்குள் பிரிட்டனின் அணுமின் எரிபொருள் உற்பத்தி நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தி இலக்கு, அந்த நிதி எவ்வாறு செலவிடப்படும் போன்றவை உள்ளிட்ட இதர அம்சங்கள் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

இத்தகைய எரிபொருள் உற்பத்தி தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்க நிறுவனம் ஒன்றும் பணியில் ஈடுபட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்