பலரின் கவனத்தை ஈர்த்த ‘துப்புரவாளர்’ எலி

பலரின் கவனத்தை ஈர்த்த ‘துப்புரவாளர்’ எலி

பிக்சா பே

10 Jan 2024 - 5:41 pm

1 mins read

வேல்ஸ்: பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் வசிக்கிறார் ஓய்வுபெற்ற அஞ்சல்காரர் ரோட்னி ஹால்புரூக், 75. இவர் வனவிலங்கு புகைப்படக் கலைஞருமாவார்.

கடந்த இரு மாதங்களாக, இவரது பணிமனையில் திடீரென்று வித்தியாசமான நடவடிக்கையைக் கண்டார்.

பறவைகளுக்காக வைக்கும் உணவை யாரோ காலணிகளுக்குள் வைப்பதையும் கவனிப்பின்றி அசுத்தமாக விட்டுச் செல்லும் அவ்விடத்தைத் துப்புரவாக்கி, பொருள்களை ஒரே இடத்தில் சேர்ப்பதையும் உணர்ந்து வியந்தார்.

ஒருமுறை, இருமுறை அல்ல. தொடர்ந்து ஒவ்வோர் இரவும் இதுவே வாடிக்கையானது. எனவே, என்ன நடக்கிறது என்று அறிந்துகொள்ள இரவில் படமாக்கக்கூடிய கேமராவைப் பொருத்தினார் ஹால்புரூக்.

விந்தை என்னவென்றால், இவற்றையெல்லாம் செய்தது ஓர் எலி என்று தெரியவந்தது.

இது தொடர்பான காணொளி இணையத்தில் பலரையும் ஈர்த்துள்ளது.

‘த கார்டியன்’, யூடியூபில் வெளியிட்ட காணொளியில் கருமமே கண்ணாக அந்த எலி பொருள்களை எடுத்து ஒரு பெட்டியில் போடுவதைக் காண முடிகிறது.

Watch on YouTube

துணி உலர்த்த உதவும் ‘கிளிப்’கள், திருகாணி, கார்க் போன்றவற்றை அழகாக அடுக்கி வைக்கிறது அந்த எலி.

ஒரு நாள் என் மனைவியை விட்டுச் சென்றால் இந்த எலி அவரையும் துப்புரவாக்கும் என்று நினைக்கிறேன் என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார் ஹால்புரூக்.

குறிப்புச் சொற்கள்