ஏமன் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா: நெருக்குதல் தொடரும் என சூளுரைத்த பைடன்

2 mins read
d6af5522-82d6-4d60-baf0-b875dfe0b222
ஹூதிப் படைகள் மீது தாக்குதல் நடத்த கிளம்பிச் சென்ற அமெரிக்கப் போர் விமானம். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: ஏமனின் ஹூதிப் படைகளுக்கு எதிராக அமெரிக்கா, ஜனவரி 12ஆம் தேதியன்று கூடுதல் தாக்குதல்களை நடத்தியது.

செங்கடலில் கப்பல்களும் கப்பல் பாதைகளும் பாதுகாக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சூளுரைத்த பிறகு, இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏமனில் ஹூதிப் படைகளின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த ‘ரேடார்’ எனப்படும் எதிரிப் படை போர் விமானங்கள், கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் மின்காந்த கருவி இருந்த இடம் குறிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஈரான் ஆதரவு ஹூதிப் படைகள் மீது ஜனவரி 11ஆம் தேதியன்று, அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் படைகள் தாக்குதல்கள் நடத்தின.

தாக்குதல்கள் குறித்து மேல் விவரங்கள் வழங்கப்படவில்லை.

ஏமன் தலைநகர் சனாவைக் குறிவைத்து அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் தாக்குதல்களை நடத்துவதாக ஹூதிப் படைகளுக்குச் சொந்தமான அல் மசிரா தொலைக்காட்சி ஒளிவழியில் தெரிவிக்கப்பட்டது.

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து செங்கடலில் செல்லும் கப்பல்களுக்கு எதிராக ஹூதிப் படைகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. பாலஸ்தீனர்களுக்கு தங்களது ஆதரவைக் காட்ட இந்த நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக அவை கூறின.

அமெரிக்கக் கூட்டணிப் படைகள் தங்கள் படைகளுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஹூதிப் படைகளின் தலைவர்கள் சூளுரைத்துள்ளனர்.

இந்நிலையில், செங்கடல் வழியாகச் செல்லும் வர்த்தக, ராணுவ கப்பல்களுக்கு எதிராக ஹூதிப் படைகள் தாக்குதல் நடத்துவதை நிறுத்தாவிடில் அவற்றுக்கு எதிராகக் கூடுதல் தாக்குதல்களை நடத்த உத்தரவிடப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்