தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

99வது நாளை எட்டியது போர்: இடைவிடாத தாக்குதலில் இஸ்ரேல்

2 mins read
fd2a899e-7b6c-47ee-b7a3-bdbbed675416
தென் காஸா வட்டாரத்தின் கான் யூனிஸ் நகரில் சனிக்கிழமை இஸ்ரேலியப் படையினர் குண்டுவீசித் தாக்கியபோது கரும்புகை கிளம்பியது. - படம்: ஏஎஃப்பி

காஸா: இஸ்ரேல்-ஹமாஸ் போரின் 99வது நாளில் காஸாவுக்குள் சனிக்கிழமை சரமாரி குண்டுமழை பொழிந்து இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டது.

விடியற்காலை வேளையில் காஸாவில் இஸ்ரேல் படையினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக அவற்றைக் கண்டவர்கள் ஊடகங்களிடம் கூறினர்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை காஸாவின் தென்பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏஎஃப்பி செய்தியாளர் தெரிவித்தார்.

குறிப்பாக கான் யூனிஸ் மற்றும் ராஃபா நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் குண்டுமழை பொழிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

காஸாவின் வடக்கே இருந்த மக்கள் இஸ்ரேலின் தொடர் தாக்குதல் காரணமாக உயிருக்குப் பயந்து தென்பகுதியில் வந்து குவிந்திருக்கும் வேளையில் அந்தப் பகுதியில் குண்டுகள் வெடித்ததாகவும் அந்தச் செய்தியாளர் கூறினார்.

இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சுகளால் காஸா வட்டாரத்தில் இணையத் தொடர்புகளும் தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டதாக பால்டெல் என்னும் தொலைத்தொடர்பு நிறுவனம் கூறியது.

“காஸா மீண்டும் இருட்டுக்குள் மூழ்கியது,” என்று அந்நிறுவனம் எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டது.

இடைவிடாத தாக்குதல் காரணமாக காயமடைந்த மக்களைச் சென்றடைவதில் உள்ள சவால் அதிகரித்திருப்பதாக பாலஸ்தீனிய ரெட் கிரசென்ட் சமூக அறநிறுவனம் தெரிவித்து உள்ளது.

செங்கடல் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை ஹமாஸ் ஆதரவு ஹுதி கிளர்ச்சிப் படையினர் மீது அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் இணைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேல்-ஹமாஸ் போர் மேலும் பல பகுதிகளுக்குப் பரவும் அச்சம் எழுந்துள்ளது.

அந்தப் படையினர் மீது அமெரிக்காவின் புதிய தாக்குதல் நடத்தப்பட்டது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

காஸா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதல்கள் காரணமாக குறைந்தபட்சம் 23,700 உயிரிழந்துவிட்டதாக காஸா உள்துறை அமைச்சின் ஆக அண்மையத் தகவல் தெரிவித்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போரில் 1,140 பேரைக் கொன்ற ஹமாஸ் குழு, 240 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்தது. நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஒருவார போர் நிறுத்தத்தின்போது அவர்களில் ஏறக்குறைய 100 பேர் விடுவிக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்