பனிச்சரிவு: சிக்கித் தவிக்கும் 1,000 சுற்றுப்பயணிகள்

பனிச்சரிவு: சிக்கித் தவிக்கும் 1,000 சுற்றுப்பயணிகள்

1 mins read
9cbc668b-bcd1-4767-be77-c4c6b7f0bec0
சுற்றுப்பயணிகள் சிலர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள சின்ஜியாங் மாநிலத்தில் அண்மையில் பனிச்சரிவு ஏற்பட்டது.

இதில் ஏறத்தாழ 1,000 சுற்றுப்பயணிகள் அங்கிருந்து வெளியே வர முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

கசக்ஸ்தான், ரஷ்யா, மங்கோலியா ஆகிய நாடுகளுடனான எல்லைப்பகுதியில் இருக்கும் ஹெமு கிராமத்தில் அந்தச் சுற்றுப்பயணிகள் இருப்பதாகச் சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹெமு கிராமத்துக்குச் செல்லப் பயன்படுத்தப்படும் சாலைகள் கடந்த சில நாள்களாகப் பனியால் மூடப்பட்டுள்ளன. இதனால் பனிச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் சுற்றுப்பயணிகளைச் சாலைகள் வழியாகச் சென்று மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஹெமு கிராமத்தில் கடந்த பல நாள்களாகத் தொடர்ந்து பனிமழை பொழிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுப்பயணிகள் சிலரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டதாக சீன அதிகாரிகள் கூறினர்.

பனிச்சரிவு காரணமாக சில இடங்களில் ஏழு மீட்டர் உயரத்தில் பனிக்குவியல் ஏற்பட்டுள்ளதாகவும் பனியை அகற்றும் இயந்திரத்தைவிட அது உயரமாக இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

பனியில் புதையுண்ட 50 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை மீண்டும் வழக்கநிலைக்குக் கொண்டு வர கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு முன்பு பணிகள் தொடங்கின.

ஹெமு கிராமத்தில் சிக்கித் தவிப்போருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்