தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்ற காலாண்டில் சீனப் பொருளியல் மீட்சி கண்டது

1 mins read
1b851ccd-3c97-41fd-a9ca-a37bb0cbc406
2024ஆம் ஆண்டுக்குச் சீனாவின் வளர்ச்சி இலக்கு கிட்டத்தட்ட 5 விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: சீனப் பொருளியல், சென்ற ஆண்டின் (2023) நான்காம் காலாண்டில் அதற்கு முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 5.2 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

ஜனவரி 17ஆம் தேதி வெளியான அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் அவ்வாறு கூறுகின்றன.

முன்னதாக, ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் 2023ன் நான்காம் காலாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.3 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று வல்லுநர்கள் முன்னுரைத்திருந்தனர்.

அந்த முன்னுரைப்பைவிட சற்றே குறைவான வளர்ச்சி பதிவானபோதும் பெய்ஜிங் சென்ற ஆண்டின் வருடாந்தர வளர்ச்சி இலக்கை எட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.

காலாண்டு அடிப்படையில், 2023 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு விழுக்காடு அதிகரித்தது.

சென்ற ஆண்டு, பொருளியல் 5 விழுக்காடு வளர்ச்சி பெறவேண்டும் என்று சீனா இலக்கு வகுத்திருந்தது. இந்த ஆண்டுக்கும் அதே இலக்கை அது வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 17ஆம் தேதி, ‘சீனா பெய்ஜ் புக் இண்டர்நேஷனல்’ (China Beige Book International) அதன் அண்மைக் கருத்தாய்வின் முடிவுகளை வெளியிட்டது.

2024ல் பொருளியல் வளர்ச்சி அதிகரிக்க வேண்டுமென்றால், வியப்பளிக்கும் வகையில் உலக அளவில் ஏதாவது தலைகீழ் மாற்றம் ஏற்பட வேண்டும் அல்லது அரசாங்கக் கொள்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அந்தக் கருத்தாய்வு கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்