9 பில்லியன் உள்ளூர் பயணங்களை எதிர்பார்க்கும் சீனா

2 mins read
79ee5e1e-1fb6-4f9e-a8e6-dfc5a1daee78
சீனப் புத்தாண்டு நெருங்குகையில், சீனாவில் இவ்வாண்டு ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கானோர் உள்ளூர் பயணங்களை மேற்கொள்வது ஜனவரி 26ஆம் தேதி தொடங்கியது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீனப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சீனாவில் மில்லியன் கணக்கானோர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர்.

சீனப் புத்தாண்டு நெருங்குகையில், சீனாவில் இவ்வாண்டு ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கானோர் உள்ளூர்ப் பயணங்களை மேற்கொள்வது ஜனவரி 26ஆம் தேதி தொடங்கியது.

அடுத்த 40 நாள்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 9 பில்லியன் உள்ளூர் பயணங்கள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க சீனாவில் விதிக்கப்பட்டிருந்த மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு வசந்தகால விழாவின்போது பதிவான 4.7 பில்லியன் உள்ளூர் பயணங்களைவிட இது கிட்டத்தட்ட இருமடங்கு அதிகம்.

இந்த 9 பில்லியன் உள்ளூர் பயணங்களில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டுப் பயணங்கள், சொந்தமாக கார் ஓட்டிச் செல்லும் பயணங்களாகும்.

மற்றவர்கள் ரயில், விமானம், படகு மூலம் சொந்த ஊர் திரும்புகின்றனர்.

ஜனவரி 26ஆம் தேதியன்று கிட்டத்தட்ட 11 மில்லியன் ரயில் பயணங்கள் எதிர்பார்க்கப்பட்டன.

அதே நாளன்று விமானம் மூலம் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்தது.

தலைநகர் பெய்ஜிங், ஷங்காய் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அந்த இரு விமான நிலையங்களும் தயாராகி வருகின்றன.

உலகிலேயே ஆகப் பெரிய அதிவேக ரயில் கட்டமைப்பை சீனா கொண்டுள்ளபோதிலும் ரயில் பயணச்சீட்டுகளை வாங்க பயணிகள் பலர் சிரமப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது உள்ளூர்ப் பயணங்களுடன் வெளிநாட்டுப் பயணங்களும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்