$112 மில்லியன் இழப்பீடு வழங்க டிரம்ப்பிற்கு உத்தரவு

2 mins read
01290c4d-651b-415c-ae9a-e5992f81f070
திருவாட்டி இ. ஜீன் கேரல் (நடுவில்). - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: முன்னாள் செய்தியாளர் இ. ஜீன் கேரலுக்கு 83.3 மில்லியன் (S$112 மில்லியன்) அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு மென்ஹேட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தீவிரமாகச் செயல்பட்டு வரும் டிரம்ப்பிற்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகக் கருதப்படுகிறது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய டிரம்ப் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1990களின் நடுப்பகுதியில் டிரம்ப் தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதை அவர் மறுப்பதால் நம்பகமான செய்தியாளர் என்று தமக்கு இருக்கும் நற்பெயருக்கு அவர் களங்கம் ஏற்படுத்திவிட்டதாகவும் கூறி திருவாட்டி கேரல் வழக்கு தொடுத்தார்.

இதுதொடர்பாக ஐந்து நாள் வழக்கு விசாரணை நடைபெற்றது. $10 மில்லியன் இழப்பீட்டுத் தொகை கோரிய திருவாட்டி கேரலுக்கு எதிர்பார்த்த தொகையைவிட அதிகமாகக் கிடைத்துள்ளது. வழக்கு விசாரணையின் பெரும்பாலான பகுதி[Ϟ]யில் டிரம்ப் கலந்துகொண்டார். ஆனால் தீர்ப்பளிக்கப்பட்டபோது அவர் நீதிமன்றத்தில் இல்லை.

“அமெரிக்க நீதித்துறை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. அது அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது அமெரிக்கா அல்ல!” என்று சமூக ஊடகத்தில் டிரம்ப் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு, தமது இரு வழக்கறிஞர்களுடன் திருவாட்டி கேரல் நீதிமன்றத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

“பெரும் பாதிப்புக்கு ஆளான பிறகு, அதை எதிர்த்துத் துணிவுடன் போராடும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்தத் தீர்ப்பு வெற்றியைத் தந்துள்ளது. பெண்களை அடக்கி ஆள முயற்சி செய்வோருக்கு இது ஒரு மாபெரும் தோல்வி,” என்று அவர் கூறினார்.

திருவாட்டி கேரலை இதற்கு முன் பார்த்ததில்லை என வழக்கு விசாரணை தொடங்கியதிலிருந்து 77 வயது டிரம்ப் கூறி வருகிறார். தமது சுயசரிதையின் விற்பனையை உயர்த்த திருவாட்டி கேரல் கட்டுக் கதை உருவாக்கியிருப்பதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்