வாஷிங்டன்: காஸாவில் சண்டையை நிறுத்த பிணையாளர் விடுவிப்பு உடன்பாடு முக்கியமான ஒன்று என்பதை அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கத்தாரின் சிற்றரசர் ஷேக் தமிம் ஹமாத் அல்-தானியும் ஒப்புக்கொண்டு உள்ளனர்.
உடன்பாடு தொடர்பான விவரங்களை திரு பைடனும் திரு ஷேக் தமிமும் தொலைபேசிவழி கலந்து பேசியதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டு உள்ளது.
ஹமாஸ் பிடித்து வைத்துள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் நீண்டதொரு காலத்துக்கு சண்டையை நிறுத்த அந்த முயற்சிகள் அவசியம் என்றும் இருவரும் ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகையின் அறிக்கை கூறியது.
“காஸா முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு கூடுதல் உயிர்காப்பு மனிதாபிமான உதவிகள் சென்றடைய சண்டை நிறுத்தப்படுவதை மையமாகக் கொண்டு பிணைக்கைதிகள் விடுவிப்பு உடன்பாடு அமைய வேண்டும் என்பதில் இரு தலைவர்களும் உறுதியாக உள்ளனர்,” என்று அறிக்கை குறிப்பிட்டது.
இதற்கிடையே, திரு பைடனின் மத்திய கிழக்கு ஆலோசகர் பிரட் மெக்குர்க் இந்த வாரம் தோஹா சென்று சேர்ந்தார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மற்றொரு பிணைக்கைதிகள் விடுவிப்பு உடன்பாட்டுக்கான சாத்தியத்தை ஆராய அவர் அங்கு சென்று இருப்பதாகக் கூறப்படுகிறது.

