தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈரான் தொடர்புடைய ஹூதி படையினர் மீது அமெரிக்கா, பிரிட்டன் கூட்டாகத் தாக்குதல்

2 mins read
2c6262bb-673a-4937-a0a6-446a7c571016
பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சு வெளியிட்ட இந்தப் படத்தில் போர் விமானம் ஒன்று ஏமன் மீது தாக்குதல் நடத்த பாய்கிறது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

வாஷிங்டன்: ஏமனில் 36 இலக்குகளைக் குறி வைத்து அமெரிக்காவும் பிரிட்டனும் இரண்டாவது நாளாக பிப்ரவரி 3ஆம் தேதி கடுமையாகத் தாக்கியுள்ளன.

கடந்த வாரம் அமெரிக்கத் துருப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக ஈரானிய தொடர்புடைய ஹூதி படையினரை இரு நாடுகளும் தாக்கியுள்ளன.

இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று யஹ்யா சாரியா எனும் ஹூதி படையின் ராணுவப் பேச்சாளர் கூறினார்.

இந்தத் தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிப் படைக்குச் சொந்தமான ஆயுத சேமிப்புக் கிடங்கு, ஏவுகணை முறை, ஏவுகணைகளைப் பாய்ச்சும் சாதனங்கள் உட்பட இதர உட்கட்டமைப்பு வசதிகள் அழிக்கப்பட்டதாக பென்டகன் கூறியது.

இவை அனைத்தும் செங்கடலில் பயணிக்கும் கப்பல்களைத் தாக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் ஏமன் முழுவதும் 13 இடங்கள் குறி வைக்கப்பட்டதாகவும் அது மேலும் தெரிவித்தது.

இஸ்ரேலும் ஹமாசும் போரிட்டு வரும் நிலையில் இந்த விவகாரம் மத்திய கிழக்கில் மேலும் பரவுவதை இந்தத் தாக்குதல் காட்டுகிறது.

“அனைத்துலகக் கப்பல் மற்றும் கடற்படை கப்பல்கள் மீதான சட்டவிரோத தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற தெளிவான செய்தியை ஹூதிகளுக்கு எதிரான தாக்குதல் காட்டுகிறது,” என்று அமெரிக்கத் தற்காப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் குறிப்பிட்டார்.

சென்ற ஜனவரி 28ஆம் தேதி ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சிப் படையினர் மேற்கொண்ட டிரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர், 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் பல்வேறு நடவடிக்கைளின் ஒரு பகுதியாக ஏமனை அமெரிக்காவும் பிரிட்டனும் கூட்டாகத் தாக்கி வருகின்றன.

பிப்ரவரி 2ஆம் தேதி அன்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படை மற்றும் அது ஆதரிக்கும் போராளிகளுடன் தொடர்புடைய 85க்கும் மேற்பட்ட இலக்குகளுக்கு எதிராக ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியது, இதில் கிட்டத்தட்ட 40 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஈராக், சிரியா மற்றும் ஜோர்டானில் உள்ள தளங்களில் உள்ள அமெரிக்கத் துருப்புகளை ஈரான் ஆதரவு போராளிகள் தாக்குவதாக வாஷிங்டன் குற்றம்சாட்டி வரும் வேளையில் ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹூதிகள் செங்கடலில் வணிக கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை குறிவைத்து தாக்கி வருகின்றன.

ஏமனில் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹூதிகள், காசாவை இஸ்ரேல் தாக்குவதால் பாலஸ்தீனியர்களுடனான ஒற்றுமையைக் காட்டுவதற்காக தங்கள் தாக்குதல்களை நடத்துவதாகக் கூறி வருகிறது.

குறிப்புச் சொற்கள்