தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரிட்டிஷ் மன்னர் சார்ல்சுக்குப் புற்றுநோய்

2 mins read
df4251cb-d773-4e48-8b0d-c12f5b80763c
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சிகிச்சை பெறுவதற்காக 75 வயது மன்னர், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை ஒத்திவைத்துள்ளார்.

இதிலிருந்து மீண்டுவர முடியும் என்று மன்னர் சார்ல்ஸ் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக பக்கிங்ஹம் அரண்மனை தெரிவித்தது.

எலிசபெத் அரசியார் மரணமடைந்ததை அடுத்து, அவரது மகனான சார்ல்ஸ் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரியணை ஏறினார்.

வெளிநோயாளி சிகிச்சைகளை அவர் தொடங்கிவிட்டதாகவும் கூடிய விரைவில் மன்னராக அனைத்துப் பணிகளையும் செய்ய ஆவலுடன் காத்திருப்பதாகவும் அரண்மனை தெரிவித்தது.

மன்னர் சார்ல்ஸ் புரோஸ்டேட் சுரப்பி தொடர்பாகக் கடந்த மாதம் மருத்துவமனையில் மூன்று இரவுகள் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவருக்குப் புற்றுநோய் இருப்பது தெரியவந்ததாகவும் அரண்மனை கூறியது.

ஆனால் மன்னருக்கு எத்தகைய புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அரண்மனை தகவல் வெளியிடவில்லை.

மன்னருக்கு ‘புரோஸ்டேட்’ புற்றுநோய் இல்லை என்று அது கூறியது.

சிகிச்சை பெறும் காலகட்டத்திலும் மன்னர் சார்ல்ஸ் தமது அதிகாரபூர்வப் பணிகளில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்குடனான வாராந்தரக் கூட்டங்களை அவர் தொடர்வார் என்று அரண்மனை உறுதிப்படுத்தியது.

அவருக்குப் பதிலாக அரச ஆலோசகர்களை நியமிக்கத் திட்டம் ஏதும் இல்லை என்று அது கூறியது.

இதனிடையே, மன்னர் சார்ல்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து தான் அதிர்ச்சியடைந்துள்ளாக பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் பிபிசி வானொலியிடம் தெரிவித்தார்.

நோய் ஆரம்பநிலையிலேயே கண்டறியப்பட்டுவிட்டதால் மன்னர் விரைவாக குணமடைய முடியும் எனத் தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மன்னருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும் திரு சுனக் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்